இஸ்ரேல் பிரதமர் நாளை வருகை: முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு

இந்தியாவுக்கு அரசு முறை பயணமாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஞாயிற்றுக்கிழமை (ஜன.14) வருகை தரவுள்ளார். அவரது பயணத்தின்போது இரு நாடுகள் இடையே முக்கிய ஒப்பந்தங்கள்

இந்தியாவுக்கு அரசு முறை பயணமாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஞாயிற்றுக்கிழமை (ஜன.14) வருகை தரவுள்ளார். அவரது பயணத்தின்போது இரு நாடுகள் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளது.
இஸ்ரேலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு ஜூலை மாதம் சுற்றுப்பயணம் செய்தார். இதன்மூலம், இஸ்ரேல் சென்ற முதல் இந்தியப் பிரதமர் எனும் பெருமையை அவர் பெற்றார்.
இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஞாயிற்றுக்கிழமை முதல் 6 நாள்கள், இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்கிறார். இந்தப் பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களை அவர் சந்தித்துப் பேசவுள்ளார். 
நெதன்யாகுவுக்கு பிரதமர் மோடி சிறப்பு விருந்து அளித்து கௌரவிக்கவுள்ளார். இதையடுத்து, குஜராத், மும்பை ஆகிய இடங்களுக்கு நெதன்யாகு செல்லவுள்ளார்.
ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கும் அமெரிக்க அதிபர் டிரம்பின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐ.நா. சபையில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
இதற்கு 127 நாடுகள் ஆதரவளித்தன. இதில் இந்தியாவும் ஒரு நாடாகும். இந்தச் சூழ்நிலையில், இஸ்ரேல் பிரதமர் இந்தியா வருகை தரவுள்ளார்.
இதுகுறித்து இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் டேனியல் கார்மனிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதிலளிக்கையில், 'அமெரிக்காவின் முடிவை எதிர்க்கும் தீர்மானத்துக்கு இந்தியா அளித்த ஆதரவு, இரு நாடுகள் இடையேயான உறவில் பாதிப்பை ஏற்படுத்தாது; வாக்கை நாட்டிலும் இரு நாடுகள் இடையேயான உறவு மிகவும் வலுவாக இருக்கிறது' என்றார்.
இஸ்ரேலிடம் இருந்து 'ஸ்பைக்' ரக ஏவுகணைகளை வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தை இந்தியா செய்து கொள்ளுமா? எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளிக்கையில், அந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படுமா, இல்லையா என்பதை அவர் உறுதி செய்யவில்லை.
இந்தியா வரும் இஸ்ரேல் பிரதமருடன் அந்நாட்டின் முன்னணி தொழிலதிபர்களைக் கொண்ட 130 பேர் குழுவும் வருகிறது. 
இதேபோல், மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு பயங்கரவாதத் தாக்குதலில் தனது பெற்றோரை பலிகொடுத்த இஸ்ரேலைச் சேர்ந்த 11 வயது சிறுவன் மோசே ஹோல்ட்பெர்க்கும் வருகிறார். மும்பையின் சாபாத் இல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், நெதன்யாகுவுடன் சேர்ந்து மோசேவும் கலந்து கொள்ள இருக்கிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com