கடற்படையை அவமதித்த கட்கரி மன்னிப்பு கேட்க வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

இந்தியக் கடற்படை அதிகாரிகளை அவமதித்த மத்திய சாலை, கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மகாராஷ்டிர காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இந்தியக் கடற்படை அதிகாரிகளை அவமதித்த மத்திய சாலை, கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மகாராஷ்டிர காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சச்சின் சாவந்த், மும்பையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மும்பையில் கடற்படை அதிகாரிகள் தங்குவதற்கு ஓர் அங்குல நிலம் கூட கொடுக்க முடியாது; அவர்கள் பாகிஸ்தான் எல்லைக்குச் செல்ல வேண்டும் என்று கட்கரி கூறியுள்ளார். அவரது கருத்து கண்டனத்துக்குரியது. இந்திய கடற்படை அதிகாரிகளை அவமதித்த கட்கரி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார் அவர்.
முன்னதாக, மும்பையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கட்கரி பேசுகையில், ''கடற்படை வீட்டு வசதித் திட்டத்துக்காக, தெற்கு மும்பையில் கடற்கரையை ஒட்ட்டிய பகுதியில் இடம் ஒதுக்குங்கள் என்று கடற்படை அதிகாரிகள் பலர் என்னை அணுகி கேட்கிறார்கள். எல்லையைக் காப்பதே அவர்கள் பணியாகும். அவர்களுக்கு தெற்கு மும்பையில் ஆடம்பரமான பகுதியில் குடியிருப்புகள் எதற்கு? எனவே, தெற்கு மும்பையில் அவர்களுக்கு ஓர் அங்குலம் நிலம் கூட கிடையாது'' என்று கூறியிருந்தார்.
தெற்கு மும்பையில் உள்ள மலபார் ஹில் பகுதியில் இருந்து கடல் விமானச்சேவையைத் தொடங்கவும், அங்கிருந்து மிதவை ஹோட்டல் ஒன்றைத் தொடங்கவும் கப்பல் போக்குவரத்துத் துறை திட்டமிட்டிருந்தது. ஆனால், அதற்கு கடற்படை அனுமதி மறுத்துவிட்டது. அதன் பின்னணியில், கடற்படைக்கு எதிராக கட்கரி தனது அதிருப்தியைத் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சச்சின் சாவந்த் மேலும் கூறுகையில், ''மும்பை பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாதுகாப்புக் காரணம் கருதி, தெற்கு மும்பையில் ஹெலிபேட் அமைக்கவும், இதர மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளவும் கடற்படை எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தச் சூழலில், மலபார் ஹில் பகுதியில் மிதவை ஹோட்டல் தொடங்குவதற்கு கட்கரி வலியுறுத்துவது ஏன்? இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். பாஜகவினரின் தேசப் பற்று போலியானது'' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com