சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளத் தயார்: இந்திய ராணுவ தலைமை தளபதி ராவத்

சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் திறன், இந்தியாவுக்கு உள்ளது என்று இந்திய ராணுவ தலைமைத் தளபதி விபின் ராவத் தெரிவித்தார்.

சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் திறன், இந்தியாவுக்கு உள்ளது என்று இந்திய ராணுவ தலைமைத் தளபதி விபின் ராவத் தெரிவித்தார்.
இதுகுறித்து தில்லியில் அவர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: சீனா சக்திவாய்ந்த நாடாக இருக்கலாம்; ஆனால் இந்தியாவும் பலவீனமான நாடு கிடையாது. ஆதலால், சீனாவைக் கண்டு நாம் கவலைப்பட வேண்டியதில்லை.
வடக்கு டோக்கா லாம் பகுதியில் தனது துருப்புகளை சீனா தொடர்ந்து வைத்துள்ளது. அங்கு சீனப் படையினரின் கூடாரங்கள் இருக்கின்றன. கண்காணிப்பு சாவடிகளும் அப்படியே இருக்கின்றன. இந்தப் பிரச்னையானது, சீனா-பூடான் இடையே இருக்கும் பிராந்தியம் தொடர்பான பிரச்னையாகும்.
எல்லைப் பகுதிகளில் சீனா தொடர்ந்து நமக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. இந்த பிரச்னையை இந்தியாவால் எதிர்கொள்ள முடியும். ஆனால், இது பெரிய பிரச்னையாக மாறாமல் இருப்பதை இந்தியா உறுதி செய்து வருகிறது. அதேநேரத்தில், நமது பகுதியை பிற நாடுகள் ஆக்கிரமிக்கவோ அல்லது நமது பகுதிக்குள் பிற நாடுகள் ஊடுருவல் மேற்கொள்வதையோ இந்தியா அனுமதிக்காது. எந்தப் பகுதியில் எல்லாம் ஊடுருவல் நடக்கிறதோ, அங்கெல்லாம் நமது படையினர் அதை முறியடிப்பர். ஏனெனில், இந்தப் பணிதான் ராணுவத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது.
நேபாளம், பூடான், மியான்மர், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகள், சீனாவுடன் நல்லுறவு வைத்து வருகின்றன. இதை இந்தியா தனது கவனத்தில் கொள்ள வேண்டும். நமது அண்டை நாடுகள், நம்மை விட்டுச் செல்ல அனுமதிக்கக் கூடாது. அது எந்த நாடாக இருந்தாலும் சரி.
இந்தியா இதுவரையிலும் பாகிஸ்தான் எல்லையில் மட்டுமே தீவிர கவனத்தை செலுத்தி வந்தது. இனிமேல், சீன எல்லையிலும் இந்தியா தீவிர கவனம் செலுத்த வேண்டும். சீன எல்லையில் நமது உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தும் பணிகளை விரைவுப்படுத்த வேண்டும். சீனாவின் தீவிர போக்கின் காரணமாக, ஆசியக் கண்டத்தில் இந்தியா மட்டும் தனித்து இருக்கவில்லை என்பதை ஊர்ஜிதப்படுத்த, இப்பிராந்தியத்தில் உள்ள நாடுகள் கூட்டமைப்புடனும், பிற நாடுகளுடனும் இந்தியா தொடர்புகளை ஏற்படுத்த வேண்டும். ராணுவ ரீதியில் சீனாவிடம் இருந்து அச்சுறுத்தல் இருக்கிறது என்பது தெரியும். ஆதலால், நமது ராணுவத்தை எதற்கும் தயாராக வைத்திருக்க வேண்டும் என்றார் ராவத்.
இதைத்தொடர்ந்து, தில்லியில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் உள்ள பணிமனை ஒன்றை ராவத் திறந்து வைத்தார். அங்கு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'ரசாயன, உயிரியல், கதிரியக்க, அணு ஆயுதங்கள் மூலம் விடுக்கப்படும் மிரட்டல்கள் தற்போது உண்மையாகியுள்ளது. குறிப்பாக, பயங்கரவாதிகளிடம் இருந்து இத்தகைய மிரட்டல் ஏற்பட்டுள்ளது. 
இந்த ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தப்படும்பட்சத்தில், வாழ்வாதார சூழ்நிலை முழுவதும் அழிந்துவிடும். இதில் இருந்து மீண்டு வருவதற்கு நீண்ட காலம் பிடிக்கும். இந்த விவகாரத்தில் அமைதி காக்காமல், நமது நாடு பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்கு நமது தொழில்நுட்பங்கள், பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் அமைப்புகளை மேம்படுத்த வேண்டும். நமது பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் நவீன பயிற்சி அளிக்க வேண்டும்' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com