தொழில் நிறுவனங்களே சிறிய ரக செயற்கைக்கோள்களைத் தயாரிக்க வாய்ப்பு

சிறிய ரக செயற்கைக்கோள்களை இந்திய தொழில் நிறுவனங்களே தயாரிக்க வாய்ப்பு உருவாகியுள்ளதாக இஸ்ரோ செயற்கைக்கோள் மைய இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
தொழில் நிறுவனங்களே சிறிய ரக செயற்கைக்கோள்களைத் தயாரிக்க வாய்ப்பு

சிறிய ரக செயற்கைக்கோள்களை இந்திய தொழில் நிறுவனங்களே தயாரிக்க வாய்ப்பு உருவாகியுள்ளதாக இஸ்ரோ செயற்கைக்கோள் மைய இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
பெங்களூரில் உள்ள இஸ்ரோ செயற்கைக்கோள் மையம் தயாரித்துள்ள கார்ட்டோசாட்-2 வரிசை (710 கிலோ), மைக்ரோசாட், ஐஎன்எஸ்-1சி (11கிலோ) ஆகிய 3 செயற்கைக்கோள்கள் தவிர, கனடா, ஃபின்லாந்து, பிரான்ஸ், கொரியா, இங்கிலாந்து, அமெரிக்காவின் 28 செயற்கைக்கோள்கள் என மொத்தம் 31 செயற்கைக்கோள்களை சுமந்து கொண்டு ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஏவுத்தளத்தில் இருந்து வெள்ளிக்கிழமை காலை 9.29 மணிக்கு பிஎஸ்எல்வி-சி40 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. 
பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் இதுவரை இந்தியாவின் 51 செயற்கைக்கோள்கள், வெளிநாட்டினரின் 237 செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. 
இஸ்ரோ செயற்கைக்கோள் மையம் தயாரித்துள்ள 98-ஆவது செயற்கைக்கோளான கார்ட்டோசாட்-2 வரிசை, 99-ஆவது செயற்கைக்கோளான ஐஎன்எஸ்-1சி, 100-ஆவது செயற்கைக்கோளான மைக்ரோசாட் ஆகியவை வெற்றிகரமாக சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
இதுகுறித்து தினமணி நிருபரிடம் அவர் மேலும் கூறியது: கார்ட்டோசாட்-2 வரிசை, ஐஎன்எஸ்-1சி, மைக்ரோசாட் ஆகிய 3 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டதோடு, இயல்பாக அவை செயல்படத் தொடங்கிவிட்டன. 
இந்த சாதனையை நிகழ்த்த கடுமையாக உழைத்த இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் விஞ்ஞானிகள், தொழில்நுட்பர்கள், ஊழியர்களுக்கு எனது பாராட்டுதல்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். கடுமையான உழைப்புக்கு தகுந்த பலன் கிடைத்துள்ளதன் மூலம் இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் புகழ் உயர பறக்கத் தொடங்கியுள்ளது.
இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தில் இருந்து 100 செயற்கைக்கோள்கள் தயாரிக்கப்பட்டுள்ளது பெரும் சாதனையாகும். இதில் மாணவர்கள் உதவியுடன் தயாரித்த செயற்கைக்கோள்களும் உள்ளன. மைக்ரோசாட் உள்ளிட்ட 100 செயற்கைக்கோள்களும் இந்தியாவிலே தயாரிக்கப்பட்டு, செயற்கைக்கோள் மையத்தில் இருந்து ஏவுதளத்துக்கு கொண்டு செல்லப்பட்டவையாகும். 
100-ஆவது செயற்கைக்கோளாக தயாரிக்கப்பட்ட மைக்ரோசாட், இஸ்ரோவுக்கு மிகவும் முக்கியமானதாகும். மைக்ரோசாட் செயற்கைக்கோள் தந்துள்ள வெற்றி, இந்தியாவில் 100 கிலோ எடைகொண்ட சிறியரக செயற்கைக்கோள்களை அதிகளவில் தயாரிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறிய ரக செயற்கைக்கோள்களை விரைவாகவும், மலிவாகவும் தயாரிக்க முடியும். திட்டமிட்டப்படி அனைத்தும் சிறப்பாக நிகழ்ந்தால், சிறியரக செயற்கைக்கோள்களை இந்திய தொழில் நிறுவனங்களே தயாரிக்கலாம். இந்திய விண்வெளி வரலாற்றில் இது முக்கியமான தருணமாகும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com