தலைமை நீதிபதிக்கு எதிராக போர்க்கொடி: 3ஆவது தரப்பின் தலையீடு தேவையில்லை

உச்ச நீதிமன்ற விவகாரத்தில் 3ஆவது தரப்பின் தலையீடு தேவையில்லை என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய 4 நீதிபதிகளில் ஒருவரான குரியன் ஜோசப் தெரிவித்தார்.
தலைமை நீதிபதிக்கு எதிராக போர்க்கொடி: 3ஆவது தரப்பின் தலையீடு தேவையில்லை

உச்ச நீதிமன்ற விவகாரத்தில் 3ஆவது தரப்பின் தலையீடு தேவையில்லை என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய 4 நீதிபதிகளில் ஒருவரான குரியன் ஜோசப் தெரிவித்தார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, வழக்குகளை பிற நீதிபதிகளுக்கு ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுவதாகவும், இதுபோல் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு பிரச்னைகள் காணப்படுவதாகவும் நீதிபதிகள் ஜே.செலமேஸ்வர், ரஞ்சன் கோகோய், எம்.பி. லோக்குர், குரியன் ஜோசப் ஆகிய 4 பேர் வெள்ளிக்கிழமை போர்க்கொடி உயர்த்தினர். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு அடுத்த நிலையில் இருக்கும் நீதிபதி செலமேஸ்வர் கூறியபோது, உச்ச நீதிமன்ற நிர்வாகம் சரியாக இல்லை, கடந்த சில மாதங்களாக விரும்பத் தகாத சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன என்றும் குறிப்பிட்டார்.
இந்நிலையில், கேரள மாநிலம், கொச்சிக்கு வந்த நீதிபதி குரியன் ஜோசப்பை சனிக்கிழமை சந்தித்து, இந்த பிரச்னை குறித்து செய்தியாளர்கள் மீண்டும் கேள்வியெழுப்பினர். அப்போது அவர் அளித்த பதில் வருமாறு:
நீதிக்காகவும், நீதித்துறையின் நலனுக்காகவும்தான் நாங்கள் 4 பேரும் அந்த விவகாரத்தை எழுப்பினோம். அதைத்தான் தில்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் 4 பேரும் தெரிவித்தோம். இதைத் தாண்டி வேறு எதுவும் இல்லை.
எங்களது கவலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். இதுபோல் எதிர்காலத்தில் சம்பவங்கள் நடக்கக் கூடாது. இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என நம்புகிறேன். அதேநேரத்தில், இந்த பிரச்னைக்குத் தீர்வு காண்பதில் 3ஆவது தரப்பின் தலையீடு தேவையில்லை. ஏனெனில், உச்ச நீதிமன்றத்துக்குள் எழுந்த பிரச்னை இதுவாகும். ஆதலால், இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமோ, அதை உச்ச நீதிமன்றமே எடுக்கும்.
குடியரசுத் தலைவரின் கவனத்துக்கு இந்தப் பிரச்னைக்கு எடுத்து செல்லப்பட மாட்டாது. ஏனெனில், உச்ச நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளுக்கு அவர் அரசியலமைப்பு சட்ட ரீதியில் பொறுப்பு கிடையாது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அரசியலமைப்பு ரீதியில் தவறு செய்யவில்லை. அதேநேரத்தில், தலைமை நீதிபதி தனது பொறுப்பை செயல்படுத்தும்போது அதற்கென இருக்கும் நடைமுறையை பின்பற்ற வேண்டும். இதைத்தான் அவரது கவனத்துக்கு கொண்டு வந்துள்ளோம்.
நீதித்துறை, நீதி ஆகியவற்றின் நலனை கருத்தில் கொண்டுதான், நீதிபதிகள் இந்த விவகாரத்தில் தன்னிச்சையாக செயல்பட்டனர். இதை சரி செய்வதற்கான ஆலோசனைகள் அளிக்கப்பட வேண்டும். அனைத்தும் சரி செய்யப்பட்டால், பிரச்னை முடிந்து விடும் என்றார் குரியன் ஜோசப்.
முன்னதாக, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியது, ஒழுங்கீன நடவடிக்கை இல்லையா? என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு குரியன் ஜோசப் பதிலளிக்கையில், "ஒழுங்கீன நடவடிக்கை இல்லை அது; இதன்மூலம், உச்ச நீதிமன்ற நிர்வாக நடவடிக்கைகளில் மேலும் வெளிப்படைத்தன்மை ஏற்படும்' என்றார்.
பிரச்னை இல்லை-ரஞ்சன் கோகோய்: இதனிடையே, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய மற்றோர் நீதிபதியான ரஞ்சன் கோகோய், உச்ச நீதிமன்றத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை என சனிக்கிழமை தெரிவித்தார். கொல்கத்தா வந்திருந்த கோகோயிடம் பிடிஐ செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அளித்த பதிலில் இதை அவர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com