பார் கவுன்சில் அமைத்தது நீதிபதிகளுடன் பேச 7 பேர் குழு

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கும், நான்கு மூத்த நீதிபதிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டைத் தீர்த்து வைத்து சமரசத்தை ஏற்படுத்தும் நோக்கில், இவ்விவகாரத்தில் தொடர்பில்லாத மற்ற
பார் கவுன்சில் அமைத்தது நீதிபதிகளுடன் பேச 7 பேர் குழு

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கும், நான்கு மூத்த நீதிபதிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டைத் தீர்த்து வைத்து சமரசத்தை ஏற்படுத்தும் நோக்கில், இவ்விவகாரத்தில் தொடர்பில்லாத மற்ற நீதிபதிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்த இந்திய வழக்குரைஞர் சங்கம் (பார் கவுன்சில்) 7 உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைத்துள்ளது.
அண்மைக் காலமாக உச்ச நீதிமன்றத்துக்கும் மத்திய அரசுக்கும் இடையே மோதல் போக்கு காணப்பட்டது. குறிப்பாக, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் கொலீஜியம் முறைக்கு மாற்றாக தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டது. இதற்காக அரசு கொண்டு வந்த சட்டம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது. மேலும், கொலீஜியம் நடைமுறை தொடரும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இது உச்ச நீதிமன்றத்துக்கும் மத்திய அரசுக்கும் இடையே கருத்து வேறுபாட்டை உண்டாக்கியது.
அதைத் தொடர்ந்து, மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பான விவகாரத்தில் ஒடிஸா மாநில முன்னாள் நீதிபதி ஐ.எம்.குத்துசி லஞ்சம் பெற்றதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இவ்வழக்கில் அவரையும் மேலும் நான்கு பேரையும் சிபிஐ கடந்த ஆண்டு செப்டம்பர் 21-ஆம் தேதி கைது செய்தது. 
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்குமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிபதி செலமேஸ்வர் தலைமையிலான அமர்வு, நீதிபதி மீதான லஞ்சக் குற்றச்சாட்டை விசாரிக்க அதிக நீதிபதிகளைக் கொண்ட அமர்வை அமைப்பதாக கடந்த ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி உத்தரவிட்டது.
எனினும், மறுநாள் இந்த விவகாரத்தில் பெரிய திருப்பம் ஏற்பட்டது. அன்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர்.கே.அகர்வால், அருண் மிஸ்ரா, அமிதவா ராய், ஏ.எம்.கான்வில்கர் ஆகிய 5 பேர் அடங்கிய அமர்வு, முந்தைய நாள் செலமேஸ்வர் அமர்வு பிறப்பித்த உத்தரவை அதிரடியாக ரத்து செய்தது.
மேலும், "உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதிதான் மற்ற நீதிபதிகளுக்கு வழக்குகளை ஒதுக்கும் அதிகாரம் படைத்தவர் ஆவார். எனவே, அமர்வுகளை அமைக்கும் விசேஷ அதிகாரம் அவருக்கு மட்டுமே உண்டு. அந்த வகையில், விசாரணைக்காக எந்தவொரு விவகாரத்தையும் 2 அல்லது மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தங்களுக்கே ஒதுக்கிக் கொள்ளவும் முடியாது; வேறு அமர்வு எதையும் அமைக்கவும் முடியாது' என்று இந்த 5 நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர். இந்த விவகாரம் மூலம் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவது பகிரங்கமாக வெளிச்சத்துக்கு வந்தது.
இதனிடையே, உச்ச நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகளான செலமேஸ்வர், ரஞ்சன் கோகோய், எம்.பி.லோக்குர், குரியன் ஜோசஃப் ஆகியோர் தில்லியில் வெள்ளிக்கிழமை திடீரென்று செய்தியாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்தனர். அப்போது தலைமை நீதிபதியின் செயல்பாடு குறித்து செலமேஸ்வர் உள்ளிட்ட நீதிபதிகள் மறைமுகமாகக் குற்றம்சாட்டினர். வழக்குகளை ஒதுக்குவதில் அவர் பாரபட்சம் காட்டுவதாகவும், மூத்த நீதிபதிகளான தங்களைத் தாண்டி வேறு நீதிபதிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை அவர் ஒதுக்குவதாகவும் அவர்கள் குறைகூறினர்.
"உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயகம் இல்லை. நிர்வாகம் சரியில்லை. கடந்த சில மாதங்களில் பல்வேறு விரும்பத்தகாத விஷயங்கள் நடைபெற்றுள்ளன' என்று நீதிபதி செலமேஸ்வர் தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து தலைமை நீதிபதியை நேரில் சந்தித்து இதைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியதாகவும், எனினும் தங்கள் முயற்சி தோல்வியில் முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக தலைமை நீதிபதிக்கு அவர்கள் சில மாதங்களுக்கு முன் எழுதிய கடிதத்தையும் இந்தச் செய்தியாளர் சந்திப்பில் செலமேஸ்வர் உள்ளிட்ட 4 நீதிபதிகளும் வெளியிட்டனர். 
பார் கவுன்சில் கூட்டம்: இந்நிலையில், பார் கவுன்சில் எனப்படும் இந்திய வழக்குரைஞர்கள் சங்கம் தில்லியில் சனிக்கிழமை அவசரமாகக் கூடியது. சங்கத்தின் தலைவர் மனன் குமார் மிஸ்ரா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மூத்த வழக்குரைஞர்கள் பங்கேற்றனர். அப்போது, நீதிபதிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தக் கருத்து வேறுபாட்டைத் தீர்த்து வைத்து சமரசத்தை ஏற்படுத்தும் நோக்கில் இப்பிரச்னையில் சம்பந்தப்படாத மற்ற நீதிபதிகள் அனைவரையும் சந்திப்பதற்கு 7 உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. 
அந்தக் குழுவானது, தலைமை நீதிபதி மற்றும் அவரை எதிர்த்து போர்க்கொடி உயர்த்திய 4 நீதிபதிகளைத் தவிர, உச்ச நீதிமன்றத்தின் மற்ற அனைத்து நீதிபதிகளையும் சந்தித்து, பேச்சு நடத்தி சமரசத்தில் ஈடுபடுவார்கள்.
இத்தகவலை பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா, பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த விவகாரத்தை வைத்து அரசியல் ஆதாயம் பெற முயற்சிக்க வேண்டாம் என்று அரசியல் கட்சிகளை வலியுறுத்தும் தீர்மானத்தை தாங்கள் இயற்றியதாகவும் அவர் தெரிவித்தார்.

"நீதிமன்றமே தீர்த்துக் கொள்ள வேண்டும்'

உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தின் (எஸ்சிபிஏ) அவசர செயற்குழுக் கூட்டம் சங்கத் தலைவரும் மூத்த வழக்குரைஞருமான விகாஸ் சிங் தலைமையில் தில்லியில் நடைபெற்றது. அப்போது தலைமை நீதிபதிக்கும் மூத்த நீதிபதிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு தொடர்பாக வேதனை தெரிவிக்கப்பட்டது. மேலும், நீதிபதிகளிடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகளும் கூடி ஆராய வேண்டும். அவர்களே இப்பிரச்னையை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வரும் 15ஆம் தேதி விசாரிப்பதற்காக பட்டியலிடப்பட்டுள்ள வழக்குகளைமற்ற நீதிபதிகளிடம் இருந்து 5 மூத்த நீதிபதிகளுக்கு மாற்ற வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக விகாஸ் சிங், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com