மகாராஷ்டிரத்தில் படகு கவிழ்ந்து விபத்து: 3 மாணவிகள் சாவு, 32 பேர் மீட்பு

மகாராஷ்டிர மாநிலத்தில் டஹானு நகர கடற்கரை அருகே 40 பள்ளிக் குழந்தைகளுடன் சென்ற படகு சனிக்கிழமை கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

மகாராஷ்டிர மாநிலத்தில் டஹானு நகர கடற்கரை அருகே 40 பள்ளிக் குழந்தைகளுடன் சென்ற படகு சனிக்கிழமை கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 3 மாணவிகள் உயிரிழந்தனர். 32 மாணவ-மாணவிகள் மீட்கப்பட்டனர். 5 பேரின் நிலைமை தெரியவில்லை.
இதுதொடர்பாக, பால்கர் மாவட்ட காவல் துறை எஸ்.பி. மஞ்சுநாத் சிங்கே கூறியதாவது:
டஹானு நகரில் உள்ள தனியார் பள்ளியொன்றைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் 40 பேர் ஒரு படகில் சனிக்கிழமை சுற்றுலா சென்றனர். கடற்கரையில் இருந்து 20 மைல் தொலைவில் கடலில் சென்று கொண்டிருந்தபோது, காலை 11.30 மணியளவில் அந்தப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கடலோரக் காவல் படையினர் விமானம், கப்பல் ஆகியவற்றில் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் கடலோரக் காவல் துறையினரும், உள்ளூர் மீனவர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அவர்கள், 32 மாணவ-மாணவிகளை பத்திரமாக மீட்டனர். எனினும், அந்தப் படகில் பயணித்த சோனல் பகவான் சுரதி, ஜானவி ஹரீஷ் சுரதி, சன்ஸ்க்ருதி மாயவன்ஷி ஆகிய மூன்று மாணவிகளும் உயிரிழந்தனர். அவர்களின் உடல்களை மீட்புப் படையினர் கண்டெடுத்தனர். இறந்த மூவரும் டஹானு நகரில் உள்ள மாசெளலி பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். மேலும், அந்தப் படகில் பயணம் செய்த 5 பேரைக் காணவில்லை. அவர்களைத் தேடும் பணி தொடர்கிறது என்றார் அவர்.
இதனிடையே, படகு விபத்தில் உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் இரண்டு நாள் பயணமாக மகாராஷ்டிர மாநிலத்துக்கு வருகை தந்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com