இரட்டைப் பதவி ஆதாய விவகாரம்: அரவிந்த் கேஜரிவால் உடனடியாக பதவி விலக பாஜக, காங்கிரஸ் வலியுறுத்தல்

இரட்டைப் பதவி ஆதாய விவகாரத்தில் அரவிந்த் கேஜரிவால் உடனடியாக பதவி விலக வேண்டும் என பாஜக, காங்கிரஸ் கட்சிகள் கடுமமையாகச் சாடியுள்ளன.
இரட்டைப் பதவி ஆதாய விவகாரம்: அரவிந்த் கேஜரிவால் உடனடியாக பதவி விலக பாஜக, காங்கிரஸ் வலியுறுத்தல்

இரட்டைப் பதவி ஆதாயம் பெற்றது தொடர்பாக தில்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 21 எம்எல்ஏ-க்கள் மீது புகார் எழுந்தது. இதில் தில்லியின் ரஜௌரி கார்டன் சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ ஜர்னைல் சிங் ராஜிநாமா செய்துவிட்டு 2017-ல் நடந்த பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் பிராகஷ் சிங் பாதலுக்கு எதிராக போட்டியிட்டார்.

இந்நிலையில், மீதமிருந்த 20 எம்எல்ஏ-க்கள் மீதான இரட்டைப் பதவி ஆதாயம் பெற்ற புகாரின் அடிப்படையில் அவர்களை உடனடியாக தகுதி நீக்கம் செய்யுமாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு தலைமை தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை பரிந்துரை செய்துள்ளது. இதனால் அந்த 20 எம்எல்ஏ-க்களின் பதவியும் பறிபோகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்மூலம் மிகவும் தரம்தாழ்ந்த செயலில் தலைமை தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து பாஜகவைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினரும், தில்லி எதிர்கட்சித் தலைவருமான விஜேந்தர் குப்தா கூறியதாவது:

இது ஒரு முதல்வராக அரவிந்த் கேஜரிவாலுக்கு மிகப்பெரிய தோல்வி. இரட்டைப் பதவி ஆதாய விவகாரத்தில் தேர்தல் ஆணையம் சரியான நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சி சரியான விளக்கத்தை அளிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் உடனடியாக சரியான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பாஜக சார்பில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் கோரிக்கை வைப்போம். இதுபோன்ற ஒரு செயலைச் செய்ததற்காக தார்மீக அடிப்படையில் அரவிந்த் கேஜரிவால் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றார்.

ஊழல் குற்றச்சாட்டுகளில் பாதிக்கும் மேற்பட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களின் இந்த இரட்டைப் பதவி ஆதாயம் முடிவுக்கு வந்தது. இதுவரை தில்லியில் லோக்பால் மசோதா நிறைவேற்றப்படவில்லை.

அக்கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ-க்களும், அமைச்சர்களும் பதவியை பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு வந்தனர். இதில் எங்கே அவர்கள் கூறிய அரசாட்சி முறை உள்ளது. இனியும் தில்லி முதல்வராக தொடர அரவிந்த் கேஜரிவாலுக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை என்று தில்லி காங்கிரஸ் கட்சித் தலைவர் அஜய் மாக்கன் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com