இந்தூர் நகரின் புகைப்படத்தை அனுப்பியது கார்டோசாட் 2 செயற்கைக்கோள்!

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) கடந்த வாரம் விண்ணுக்கு அனுப்பிய கார்டோசாட் -2 வரிசை செயற்கைக்கோள், மத்தியப் பிரதேச மாநில தலைநகரான இந்தூரின் ஒரு பகுதியை படமெடுத்து
கார்டோசாட் - 2 வரிசை செயற்கைக்கோள் அனுப்பியுள்ள இந்தூர் நகரின் புகைப்படம்.
கார்டோசாட் - 2 வரிசை செயற்கைக்கோள் அனுப்பியுள்ள இந்தூர் நகரின் புகைப்படம்.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) கடந்த வாரம் விண்ணுக்கு அனுப்பிய கார்டோசாட் -2 வரிசை செயற்கைக்கோள், மத்தியப் பிரதேச மாநில தலைநகரான இந்தூரின் ஒரு பகுதியை படமெடுத்து அனுப்பியுள்ளது. இஸ்ரோ தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படத்தில் இந்தூர் நகரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் மைதானம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் மிகத் தெளிவாக பதிவாகியுள்ளது உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்தில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை (ஜன.12) பிஎஸ்எல்வி சி -40 ராக்கெட்டில் கார்டோசாட் 2 வரிசை செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு நிலை நிறுத்தப்பட்டது .இந்தச் செயற்கைக்கோளுடன் சென்ற 30 மைக்ரோ மற்றும் நானோ செயற்கைக்கோள்களும், அவற்றுக்குரிய புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்த செய்து இஸ்ரோ சாதனைப் படைத்தது. 
பூமியில் இருந்து புறப்பட்ட 17 நிமிடம் 18.8 வினாடிகளில் பிஎஸ்எல்வி சி -40 ராக்கெட்டில் இருந்து கார்டோசாட் 2 செயற்கைக்கோள் பிரிந்து 505 கி.மீ. தூரத்தில் புவி வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இதன் பின்பு, இதர 30 மைக்ரோ மற்றும் நானோ செயற்கைக்கோள்களையும் 2 மணி நேரம் 21 நிமிடத்தில் அவற்றுக்கான சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தியது பிஎஸ்எல்வி சி40 ராக்கெட்.
புவி கண்காணிப்பு: புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான கார்டோசாட் -2 புவியின் மேற்பரப்பில் இருந்து 505 கி.மீ. தொலைவில் பூமியை சுற்றி வந்து பல்வேறு கோணங்களில் படம் எடுக்கும். 710 கிலோ எடைக்கொண்ட இந்தச் செயற்கைக்கோளின் ஆயுள் காலம் 5 ஆண்டுகளாகும். தொலையுணர்வு தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்தச் செயற்கைக்கோளில் துல்லியமான படங்களை எடுக்கும் சிறப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. நில வரைப்படம் தயாரித்தல், போக்குவரத்து ஒழுங்குப்படுத்துதல், நீர் பங்கீடு, கடலோர நிலங்களின் பயன்பாடு மற்றும் ஒழுங்குப்படுத்துதல் ஆகிய பணிகளுக்கு இந்த செயற்கைக்கோள் உதவி புரியும். இதில் உள்ள 2 கேமராக்கள், 2 மீட்டர் விட்டத்தில் இருக்கும் எந்தவொரு பொருளையும் துல்லியமாக படம் எடுக்கக்கூடியது.
கார்டோசாட் -2 செயற்கைக்கோள் தனது முதல் புகைப்படத்தை மிகத் தெளிவாக எடுத்து அனுப்பியுள்ளதன் மூலம், அதன் பணிகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் நம்பிக்கையை இஸ்ரோவுக்கு அளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com