ஆதாயம் தரும் பதவி வகிப்பு சத்தீஸ்கரில் 11 பாஜக எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும்: காங்கிரஸ்

சத்தீஸ்கரில் ஆதாயம் தரும் பதவிகளை வகிக்கும் பாஜக எம்எல்ஏக்கள் 11 பேரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது.

சத்தீஸ்கரில் ஆதாயம் தரும் பதவிகளை வகிக்கும் பாஜக எம்எல்ஏக்கள் 11 பேரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது.
தில்லியில் ஆதாயம் தரும் பதவிகளை வகித்ததாக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 20 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் இவ்வாறு கூறியுள்ளது.
இதுகுறித்து ராய்ப்பூரில் காங்கிரஸ் மூத்த தலைவர் முகமது அக்பர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
தில்லியில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் மீதான நடவடிக்கையில் இருந்து, சத்தீஸ்கரில் சட்டப்பேரவை செயலர்கள் நிலையிலான பதவிகளை பாஜக எம்எல்ஏக்கள் வகிப்பது சட்டவிரோதம் என்பது நிரூபணமாகியுள்ளது. எனவே, ஆதாயம் தரும் பதவியை வகிக்கும் காரணத்துக்காக சத்தீஸ்கரைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏக்கள் மீதும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு நான் வழக்குத் தொடுத்தேன். அதில், சட்டப் பேரவை செயலர்களாக பாஜக எம்எல்ஏக்கள் நியமிக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன். 
இதேபோல், கடந்த 2016ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையத்துக்கும் கடிதம் எழுதினேன். 
அந்த கடிதத்துக்கு தேர்தல் ஆணையம் அளித்த பதிலில், சம்பந்தப்பட்ட மாநிலத்தைச் சேர்ந்த ஆளுநர் பரிந்துரை செய்தால் மட்டுமே எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்ய முடியும் எனத் தெரிவித்திருந்தது.
இதைத் தொடர்ந்து, சத்தீஸ்கர் ஆளுநர் பல்ராம் தாஸ் தாண்டனுக்கு நான் கடிதம் எழுதினேன். ஆனால் அந்த கடிதத்தை நான் எழுதி ஓராண்டுகாலம் ஆகிவிட்ட பின்னரும், தேர்தல் ஆணையத்துக்கு ஆளுநர் பரிந்துரைக்கவில்லை.
சத்தீஸ்கரில் 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால், சிறுபான்மை அரசு ஆகிவிடுவோம் என்று பாஜக அரசு நினைக்கிறது. இந்த விவகாரத்தில் ஆளுநர் சரியான முடிவை எடுக்கவில்லையெனில், குடியரசுத் தலைவரிடம் காங்கிரஸ் முறையிடும் என்றார் அக்பர்.
சத்தீஸ்கரை ஆளும் பாஜக அரசுக்கு, அந்த மாநில சட்டப் பேரவையில் (மொத்தம் 90 எம்எல்ஏக்கள்) 49 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதற்கடுத்து காங்கிரஸுக்கு 39 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com