ஆம் ஆத்மிக்கு யஷ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா ஆதரவு

தில்லியில் எம்எல்ஏக்கள் 20 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில், ஆம் ஆத்மி கட்சிக்கு பாஜக மூத்த தலைவர்களான யஷ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தில்லியில் எம்எல்ஏக்கள் 20 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில், ஆம் ஆத்மி கட்சிக்கு பாஜக மூத்த தலைவர்களான யஷ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக சுட்டுரையில் சத்ருகன் சின்ஹா வெளியிட்ட பதிவுகளில், 'குடியரசுத் தலைவரின் முடிவானது, நீதிக்கு எதிரானதாகும்; உயர் நீதிமன்ற விசாரணை முடிவடையும் வரையிலோ, தீர்ப்பு வெளியாகும் வரையிலோ காத்திருக்காமல் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். இது துக்ளக் ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவாகும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜகவின் மற்றோர் மூத்த தலைவரும், மக்களவை எம்.பி.யுமான சத்ருகன் சின்ஹா, சுட்டுரையில் வெளியிட்ட பதிவுகளில், 'ஆம் ஆத்மி கட்சியை அரசியல் ரீதியில் பழிவாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இது, அதிக காலம் நீடிக்காது. இதைக் கண்டு கவலைப்பட வேண்டாம். மகிழ்ச்சியாக இருப்போம். விரைவில் நீதி கிடைக்கும் என்று நம்புவோம். நீதி கிடைக்க பிரார்த்திப்போம். வாய்மையே வெல்லும். ஜெய் ஹிந்த்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாயம் தரும் பதவிகளில் இருந்ததாக தெரிவித்து, தில்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 20 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யும்படி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்திருந்தது. இந்த பரிந்துரையை ஏற்று, 20 எம்எல்ஏக்களையும் தகுதிநீக்கம் செய்து, ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். தில்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு 65 எம்எல்ஏக்கள் இருந்தனர். அவர்களில் 20 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட போதிலும், தில்லியில் ஆட்சி நடத்துவதற்கு போதிய எம்எல்ஏக்கள் அக்கட்சிக்கு உள்ளனர். இதனால், தில்லி ஆம் ஆத்மி அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை.
மத்தியில் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில், யஷ்வந்த் சின்ஹாவும், சத்ருகன் சின்ஹாவும் மத்திய அமைச்சர்களாக இருந்தனர். இருப்பினும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் இருவருக்கும் வாய்ப்பளிக்கப்படவில்லை. கட்சியில் இருந்து இருவரும் ஓரங்கட்டி வைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசையும் யஷ்வந்த் சின்ஹாவும், சத்ருகன் சின்ஹாவும் தொடர்ந்து விமர்சித்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com