துணைநிலை ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் கிடையாது: புதுவை முதல்வர் நாராயணசாமி

துணைநிலை ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் கிடையாது என்று புதுவை முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.  
துணைநிலை ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் கிடையாது: புதுவை முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: துணைநிலை ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் கிடையாது என்று புதுவை முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 

துணைநிலை ஆளுநருக்கான அதிகாரம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில், மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் முடிவுகளில் தலையிட துணைநிலை ஆளுநர்களுக்கு அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.

இந்த நிலையில், தீர்ப்பு குறித்து தனதுஅலுவலகத்தில் முதல்வர் நாராயணசாமி புதன்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:

உச்ச நீதிமன்றத்தில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தொடுத்த வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் புதுவைக்கு 100-க்கு 110 சதவீதம் பொருந்தும் என்று நேற்றே தெரிவித்துள்ளேன். .

நான் முதல்வரானதில் இருந்து அமைச்சரவையின் அறிவுரையின்படிதான் துணைநிலை ஆளுநர் செயல்படவேண்டும். அவருக்கு என தனிப்பட்ட அதிகாரம் இல்லை என அறிவுறுத்தி வந்தேன். இதுதொடர்பாக அவருக்கு கடிதநிகழும் எழுதியுள்ளேன். அதேபோல அதிகாரிகளை அழைத்து தனியாகக் கூட்டம் நடத்த ஆளுநருக்கு அதிகாரம் இல்லை எனக் கூறியுள்ளேன். பல பகுதிகளுக்கு சென்று பார்க்க அவருக்கு உரிமை உண்டு. ஆனால், தனியாக உத்தரவு போட அதிகாரம் இல்லை என ஏற்கெனவே கருத்து தெரிவித்துள்ளேன்.

மக்கள் நலத் திட்டங்களை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு செய்யும் போது அதற்குத் துணைநிலை ஆளுநர் தடையாக இருக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மக்கள் நலத் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என நான் கூறியது தீர்ப்பிலேயே வந்துள்ளது. அமைச்சரவை எடுத்த முடிவில் கை வைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என நான் கூறியதையும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. 

புதுவையில் மக்கள் தேர்ந்தெடுத்த அரசு அமைந்து, முதல் சட்டப்பேரவைக் கூட்டம் கூடியதுமே அனைத்து அதிகாரங்களும் சட்டப்பேரவைக்கு வந்துவிடும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஆளுநருக்கு எந்த முடிவெடுக்கவும் தனி அதிகாரம் இல்லை எனத் தெளிவாக கூறியுள்ளது. முழு அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கே உண்டு.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு புதுவைக்கு பொருந்தாது என்று துணை நிலை ஆளுநர் தெரிவித்து வருவதாக அறிகிறேன்.  புதுவை துணைநிலை ஆளுநரைப் பொருத்தவரை, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிப்பார் என்று நம்புகிறேன். இதை மீறி துணைநிலை ஆளுநரின் உத்தரவை செயல்படுத்தும் அதிகாரிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com