ஏடிஎம் பண மோசடி வழக்கு: முக்கிய எதிரி கைது

ஏடிஎம் பண மோசடி வழக்கில் தேடப்பட்ட சந்துருஜி 3 மாதங்களுக்குப் பிறகு புதுவை சிபிசிஐடி போலீஸாரால் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
ஏடிஎம் பண மோசடி வழக்கு: முக்கிய எதிரி கைது

ஏடிஎம் பண மோசடி வழக்கில் தேடப்பட்ட சந்துருஜி 3 மாதங்களுக்குப் பிறகு புதுவை சிபிசிஐடி போலீஸாரால் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
புதுச்சேரியில் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களின் ஏடிஎம் அட்டை ரகசிய எண்ணை ஸ்கிம்மர் கருவி பொருத்தி கண்டறிந்து, பின்னர் போலி அட்டைகள் தயாரித்து வங்கிக் கணக்குகளில் இருந்து கோடிக்கணக்கில் பணத்தை மோசடி செய்தது தொடர்பாக புதுவை சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கில் முக்கிய எதிரியான அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சந்துருஜியை தேடப்படும் எதிரியாக சிபிசிஐடி அறிவித்தது. மேலும், இந்த வழக்கில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சத்தியா, சந்துருஜியின் தம்பி மணிசந்தர், பீட்டர், தினேஷ், இர்பான் ரகுமான் உள்பட 15 பேர் சிபிசிஐடி போலீஸாரால் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனர்.
இந் நிலையில், சென்னையில் பதுங்கியிருந்த சந்துருஜியை சிபிசிஐடி போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
இது குறித்து புதுவை காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் சிபிசிஐடி எஸ்.எஸ்.பி. ராகுல் அல்வால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சந்துருஜி பேருந்து மூலமாகவே கோவை, சென்னை, புணே, மும்பை, தில்லி என பல நகரங்களுக்குச் சென்று வந்துள்ளார். அவர் கட்செவி அஞ்சல் மூலமாகவே பேசி வந்துள்ளார். அதனால், தனியாக அவர் பேசும் முறையைக் கணக்கிட்டு திட்டம் வகுத்து, சென்னையில் ஒரு குழுவினர் தங்கியிருந்தனர். அந்தக் குழுவினரிடம் தற்போது பிடிபட்டார்.
அவரிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற்றுள்ளோம். தனது பெயரிலும், மற்றவர்களிடமிருந்தும் ஸ்வைப்பிங் இயந்திரம் வாங்கி விநியோகம் செய்துள்ளார். அவர்கள் போலி ஏடிஎம் அட்டைகளைத் தயார் செய்து, பலரது வங்கிக் கணக்குகளில் இருந்து பல கோடி ரூபாய் திருடி அசையும், அசையா சொத்துகளை வாங்கியுள்ளனர். கைதாகியுள்ள சந்துருஜி தரகர் போன்றே செயல்பட்டுள்ளார்.
வங்கி ஏடிஎம் அட்டை, கடன் அட்டையைப் பயன்படுத்தும் போது இணையத்தில் விவரங்கள் பதிவாகும். அத்துடன் ஒரு சில இணையப் பயன்பாட்டில் வங்கி அட்டைகளின் பின்புறமுள்ள சிவிவி' எண் பதிவாகும். இந்த விவரங்களை ஹேக்கர்களிடம் இருந்து ஏடிஎம் திருட்டு வழக்கில் மூளையாகச் செயல்பட்டோர் (பீட்டர், தினேஷ், இர்பான் ரகுமான் ) வாங்கியுள்ளனர். ஒரு தகவலை 4 அமெரிக்க டாலர் செலுத்தி பெற்றுள்ளனர்.
வங்கி அட்டை விவரங்கள் பெற்று அதன்மூலம் விமானப் பயணச்சீட்டு முன்பதிவு செய்து, அதை டிராவல் முகமை மூலம் குறைந்த விலைக்கு விற்று வந்துள்ளனர்.
அதிகளவில் அமெரிக்க அட்டைகளில்தான் திருடியுள்ளனர். இதில் பாதிக்கப்பட்டோர் அமெரிக்கா, ஸ்வீடன், இத்தாலி, சவூதி உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தோராக இருக்கின்றனர். அவர்களில் பலரை தொடர்பு கொண்டு பேசினோம். குறிப்பாக, 140 பேர் பாதிக்கப்பட்டோராக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் பணம் பயன்பாடு இருந்தால் வாடிக்கையாளருக்கு எஸ்எம்எஸ் தகவல் வராது. இந்தியாவில் மட்டுமே எஸ்எம்எஸ் வரும் என்பதும் எதிரிகளுக்கு வசதியாகி விட்டது.
வங்கி அட்டை விவரங்களை ஆனியன் (ர்ய்ண்ர்ய்) என்ற இணையத்துக்குச் சென்றுதான் எதிரிகள் ஹேக்கர்களிடம் இருந்து பெற்றுள்ளனர்.
இந்த இணையத்துக்குள் நாம் பயன்படுத்தும் பிரவுசர்களின் மூலம் பயன்படுத்த முடியாது. டோர் (பர்ழ்) என்ற பிரவுசர் மூலமே பயன்படுத்த முடியும். இந்த பிரவுசரால் பயன்பாட்டாளர்களைக் கண்டறிவது கடினம்.
சந்துருஜியிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறோம். அரசியல் தொடர்பு பற்றி இதுவரை எவ்விதத் தகவலையும் அவர் தெரிவிக்கவில்லை.
இந்த வழக்கில் சர்வதேசத் தொடர்பு இருப்பதால், சர்வதேச காவல் துறை (இன்டர்போல்) உதவியை கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் ராகுல் அல்வால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com