கர்நாடக பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி வாய்ப்பை இழந்தது ஏன்?

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் பொய்ப் பிரசாரத்தை முறியடிக்கத் தவறியதால்தான் காங்கிரஸ் வெற்றி வாய்ப்பை இழந்ததாக முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
கர்நாடக பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி வாய்ப்பை இழந்தது ஏன்?

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் பொய்ப் பிரசாரத்தை முறியடிக்கத் தவறியதால்தான் காங்கிரஸ் வெற்றி வாய்ப்பை இழந்ததாக முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். பெங்களூரு அரண்மனை மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக தினேஷ் குண்டுராவ், செயல் தலைவராக ஈஸ்வர் கண்ட்ரே ஆகியோர் பதவியேற்ற விழாவில் அவர் பேசியது: 
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எதிர்கொண்டோம். அந்தத் தேர்தலில் என் மீதும், ஜி.பரமேஸ்வர் மீதும் ராகுல் காந்தி முழுமையான நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி அமல்படுத்திய திட்டங்களை அங்கீகரிக்க மக்கள் தவறிவிட்டனர். ராகுல் காந்தியின் நம்பிக்கை ஈடேறாமல் போனது வருத்தமளிக்கிறது. மக்களுக்கு அளித்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றி, ஆட்சி நடத்தினோம். 
ஆனால், ஆட்சி அமைக்கும் வாய்ப்பை மக்கள் வழங்கவில்லை. பாஜகவினர் தொடர்ந்து பொய்ப் பிரசாரம் செய்து, இந்துத்துவா கொள்கைகளை முன்வைத்து காங்கிரஸுக்கு எதிராக மக்களைத் திருப்பினர். பாஜக, ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று காங்கிரஸ் அரசுக்கு எதிராக பொய்ப் பிரசாரம் செய்தனர். 20 பேருக்கு ஒரு தொண்டர் வீதம் தினமும் சென்று மக்களின் மனங்களை மாற்றும் வேலைகளில் பாஜகவினர் ஈடுபட்டனர். அவர்களின் பொய் பிரசாரத்தை முறியடிக்கத் தவறியதே சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு முக்கிய காரணமாகும். 
2013-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் கடலோர மாவட்டங்களில் 19-இல் 13 இடங்கள் காங்கிரஸுக்கும், 3 சுயேச்சைகளுக்கும், 3 பாஜகவுக்கும் கிடைத்திருந்தன. ஆனால், இந்தத் தேர்தலில் 19-இல் 3 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. ஜாதி, மத உணர்வுகளைத் தூண்டிவிட்டு சமுதாயத்தைப் பிளவுபடுத்தி, காங்கிரஸுக்கு எதிராக மக்களைத் திசை திருப்பும் முயற்சியில் பாஜகவினர் தீவிரம் காட்டினர். வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவினரின் பொய்ப் பிரசாரத்தை முறியடிக்க காங்கிரஸ் தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும். 
மக்களவைத் தேர்தலில் தேசிய பிரச்னைகளை முன்வைத்து பிரசாரம் செய்ய வேண்டும். கடந்த 4 ஆண்டுகளில் பிரதமர் மோடி, அனைத்துத் துறைகளிலும் தோல்வியடைந்துள்ளார். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறி விட்டார். இந்துத்துவா கொள்கைகளை முன்வைத்து தேர்தலில் வென்றுவிடும் கனவில் பாஜக உள்ளது. பாஜகவின் கனவை முறியடிக்க வேண்டும். 
கர்நாடகத்தில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் 20 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்ற வேண்டும். அடிமட்டத்தில் உள்ள தொண்டர்கள், வாக்காளர்களைச் சந்தித்து காங்கிரஸ் அரசின் சாதனைகளை விளக்க வேண்டும். 
சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததால், மஜதவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துள்ளோம் . பொது செயல் திட்டத்தின் அடிப்படையில் ஆட்சி நடத்தப்படுகிறது. அதன்படியே பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏழைகளின் துயர் துடைப்பதற்காக தொடங்கப்பட்ட அன்னபாக்கியா திட்டத்தில் மாதம் ஒரு நபருக்கு வழங்கப்பட்ட 7 கிலோ அரிசியே தொடர வேண்டும். அதேபோல, பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரி அதிகரிக்கும் முடிவை கைவிட வேண்டும். மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு அனைவரும் ஒற்றுமையாகப் பாடுபடுவோம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com