நீரவ் மோடி, மெஹுல் சோக்ஷியை தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கக் கோரி மனு

தொழிலதிபர்கள் நீரவ் மோடி, மெஹுல் சோக்ஷி ஆகியோரை தலைமறைவு பொருளாதார குற்றவாளியாக அறிவிக்குமாறு சட்டவிரோத பணப் பரிவர்த்தனை குற்ற வழக்குகளை விசாரித்துவரும்
நீரவ் மோடி, மெஹுல் சோக்ஷியை தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கக் கோரி மனு

தொழிலதிபர்கள் நீரவ் மோடி, மெஹுல் சோக்ஷி ஆகியோரை தலைமறைவு பொருளாதார குற்றவாளியாக அறிவிக்குமாறு சட்டவிரோத பணப் பரிவர்த்தனை குற்ற வழக்குகளை விசாரித்துவரும் மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்தது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,400 கோடி கடன் பெற்று அதனை திருப்பிச் செலுத்தாமல் நீரவ் மோடியும், அவரது உறவினர் மெஹுல் சோக்ஷியும் வெளிநாட்டுக்குத் தப்பி ஓடிவிட்டனர்.
அவர்களுக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இதுபோன்ற முறைகேடு செய்து கடன் பெற்று வெளிநாட்டுக்குத் தப்பி ஓடுபவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்வதற்கு வழிவகுக்கும் தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள் மசோதா கடந்த மார்ச் 12-ஆம் தேதி மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த அவசரச் சட்டத்துக்கு ஏப்ரல் 21-ஆம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவசரச் சட்டத்தை பிரகடனப்படுத்த ஒப்புதல் அளித்தார்.
இந்தச் சட்டத்தின் கீழ் நீரவ் மோடி, மெஹுல் சோக்ஷி ஆகியோருக்கு எதிராக அமலாக்கத் துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர்.
மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் 2 மனுக்களை தனித்தனியாக புதன்கிழமை அமலாக்கத் துறை தாக்கல் செய்தது. அதில், நீரவ் மோடி, மெஹுல் சோக்ஷி ஆகியோரை தலைமறைவு பொருளாதார குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும். பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் உள்ள சொத்துகள் உள்பட இவர்கள் இருவருக்குச் சொந்தமான ரூ.3,500 கோடி மதிப்பிலான அசையும், அசையாத சொத்துகளை பறிமுதல் செய்ய அனுமதி அளிக்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
நீரவ் மோடி, மெஹுல் சோக்ஷி ஆகியோரை கைது செய்வதற்கு சர்வதேச போலீஸாரின் உதவியை நாடுவதற்காக ரெட் கார்னர்' நோட்டீஸும் அமலாக்கத் துறை அனுப்பியது.
முன்னதாக, பல்வேறு பொதுத் துறை வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் பெற்று அதை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்குத் தப்பி ஓடிய தொழிலதிபர் விஜய் மல்லையாவை தலைமறைவு பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கக் கோரி, இதே அவசரச் சட்டத்தின் கீழ் மனு ஒன்றை நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்தது.
ரூ.100 கோடி அல்லது அதற்கும் அதிகமான குற்ற வழக்குகள் இந்த அவசரச் சட்டத்தின் கீழ் வரும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com