பணிநியமன அதிகாரம்: சட்ட ஆலோசனை பெறுவதாக ராஜ்நாத் உறுதி: கேஜரிவால் தகவல்

தில்லி அரசு அதிகாரிகளின் பணி நியமனம், பணியிடமாற்றம் தொடர்பான அதிகார விவகாரம் குறித்து சட்ட ஆலோசனைப் பெற்று பதிலளிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
ராஜ்நாத் சிங்கை புதன்கிழமை சந்தித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கிறார் கேஜரிவால்
ராஜ்நாத் சிங்கை புதன்கிழமை சந்தித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கிறார் கேஜரிவால்

தில்லி அரசு அதிகாரிகளின் பணி நியமனம், பணியிடமாற்றம் தொடர்பான அதிகார விவகாரம் குறித்து சட்ட ஆலோசனைப் பெற்று பதிலளிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்ததாக முதல்வர் கேஜரிவால் தெரிவித்தார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தில்லி அரசுக்கே அதிக அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் கடந்த 4ஆம் தேதி தீர்ப்பளித்தது. இதன் மூலம் கடந்த மூன்றரை ஆண்டுகளாக நீடித்து வரும் அதிகார மோதல் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த மோதல் தொடர்கிறது.
தில்லி அதிகாரிகள் பணிநியமனத்தில் முதல்வர் கேஜரிவாலின் ஒப்புதலின்படி புதிய நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு மணீஷ் சிசோடியா பிறப்பித்த உத்தரவை தில்லி பணிகள் துறை அதிகாரிகள் ஏற்க மறுத்துவிட்டனர். 
இதையடுத்து, இந்த விவகாரத்தை துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜாலை சந்தித்து கேஜரிவால் முறையிட்டார். ஆனால் பணிகள் துறையை தில்லி அரசின் கட்டுப்பாட்டில் தர அனில் பய்ஜால் மறுத்துவிட்டதாக கேஜரிவால் குற்றம்சாட்டினார். மேலும், தீர்ப்பில் ஏதாவது குழப்பம் இருந்தால் உச்ச நீதிமன்றத்தை அணுகி துணைநிலை ஆளுநர் தெளிவுப்படுத்தி கொள்ள வேண்டும் என்று கேஜரிவால் கூறினார். இந்நிலையில், தில்லி அரசு அதிகாரிகள் மூன்று பேரை பணியிட மாற்றம் செய்து துணைநிலை ஆளுநர் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார். இதனால் தில்லி அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையேயான அதிகார மோதல் மேலும் தீவிரமடைந்தது. இதையடுத்து, தீர்ப்புக்கு பிறகும் தில்லியில் நீடிக்கும் அதிகார மோதல் பிரச்னை குறித்து விசாரிக்க வேண்டும் என்று தில்லி அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை முறையிடப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, அடுத்த வாரம் விசாரிக்கப்படும் என்று தெரிவித்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கேஜரிவால், மணீஷ் சிசோடியா ஆகியோர் ராஜ்நாத் சிங்கை அவரது இல்லத்தில் புதன்கிழமை மாலை சந்தித்து பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் கேஜரிவால் கூறியதாவது:
உச்ச நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசும், துணைநிலை ஆளுநரும் அவரவருக்கு ஏற்ப விளக்கமளித்து கொண்டுள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் ஒரு பகுதி தீர்ப்பை மட்டும் அமல்படுத்துவோம், மற்ற பகுதியை அமல்படுத்த மாட்டோம் என்ற வகையில் செயல்படுகின்றனர் என்று ராஜ்நாத் சிங்கிடம் தெரிவித்தோம். ஒன்று உச்ச நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு பின்பற்ற வேண்டும் அல்லது இந்த விவகாரம் தொடர்பாக கீழ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பின்பற்ற வேண்டும் என தெரிவித்தோம். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் முக்கிய அம்சங்களை வரிக்கு வரி படித்து காண்பித்தோம். எங்களின் கருத்துகள் திருப்திகரமாக இருந்ததுபோல் அவரது நடவடிக்கைகள் அமைந்தது. இதுதொடர்பாக அதிகாரிகளுடன் சட்ட ஆலோசனை பெறுவதாக அவர் தெரிவித்தார். ஜூலை 16ஆம் தேதி ராஜ்நாத் சிங்கை மீண்டும் சந்திக்க உள்ளேன் என்றார் கேஜரிவால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com