மக்களவை தேர்தலில் மாயாவதி மீண்டும் போட்டி?

அடுத்த ஆண்டு (2019) நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி போட்டியிடவுள்ளார் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மக்களவை தேர்தலில் மாயாவதி மீண்டும் போட்டி?

அடுத்த ஆண்டு (2019) நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி போட்டியிடவுள்ளார் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உத்தரப் பிரதேசத்தில் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்க பகுஜன் சமாஜ் ஏற்கெனவே தயாராகிவிட்டது. சமாஜவாதியுடன் தொகுதிப் பங்கீடு குறித்தும் சிலகட்ட பேச்சுவார்த்தைகளை அக்கட்சி நடத்தியுள்ளது. கடந்த 1998, 1999, 2004 ஆகிய ஆண்டுகளில் மக்களவைத் தொகுதி எம்.பி.யாக மாயாவதி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவராக கடந்த 2003-ஆம் ஆண்டில் மாயாவதி பதவியேற்ற பிறகு, தான் நேரடியாக தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று முடிவெடுத்தார். எனினும், 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில்
உத்தரப் பிரதேசத்தின் அம்பேத்கர்நகர் தொகுதியில் போட்டியிட்டு மாயாவதி வெற்றி பெற்றார். இருப்பினும், தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்துவிட்டு மாநிலங்களவை உறுப்பினரானார்.
மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்துவந்த மாயாவதி, கடந்த ஆண்டு அந்தப் பதவியையும் ராஜிநாமா செய்தார். இந்தச் சூழ்நிலையில் அவர், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டு வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் போட்டியிடுவதற்கான தொகுதியை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாக கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: உத்தரப் பிரதேசத்தில் 2012 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலிலும், 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் பகுஜன் சமாஜ் தோல்வியைத் தழுவியது. எனவே, எதிர்வரும் மக்களவைத் தேர்தல் பகுஜன் சமாஜ் கட்சிக்கு மிக முக்கியமானதாகும். கட்சித் தொண்டர்களுக்கு புது உத்வேகத்தை ஏற்படுத்த மாயாவதி போட்டியிடுவார்.
அம்பேத்கர்நகர் தொகுதியில் அவர் போட்டியிட வாய்ப்புள்ளது. அந்தத் தொகுதி இல்லையெனில், பிஜ்னோர் தொகுதியில் அவர் போட்டியிடுவார்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com