மக்களவைத் தேர்தல்: நிதீஷுடன் அமித் ஷா இன்று ஆலோசனை

மக்களவைத் தேர்தலுக்கு தயாராவதற்காக, பிகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதீஷ் குமாருடன் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா
மக்களவைத் தேர்தல்: நிதீஷுடன் அமித் ஷா இன்று ஆலோசனை

மக்களவைத் தேர்தலுக்கு தயாராவதற்காக, பிகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதீஷ் குமாருடன் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா வியாழக்கிழமை ஆலோசனை நடத்துகிறார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) மீண்டும் இணைந்த பிறகு, அமித் ஷா பாட்னா வருவது இதுவே முதல் முறையாகும்.
வியாழக்கிழமை காலை 10 மணிக்கு விமான நிலையத்துக்கு வருகை தரும் அவர், அங்கிருந்து அரசு விருந்தினர் இல்லத்துக்குச் செல்கிறார். அங்கு முதல்வர் நிதீஷ் குமாருடன் சிற்றுண்டி அருந்துகிறார். நாள் முழுவதும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் அமித் ஷா, இரவு முதல்வர் நிதீஷ் குமாரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இரவு உணவு அருந்துகிறார். இரவில், அரசு விருந்தினர் இல்லத்தில் தங்கும் அவர், வெள்ளக்கிழமை காலை தில்லி செல்கிறார்.
இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் நித்யானந்தா ராய் புதன்கிழமை கூறியதாவது:
அமித் ஷாவின் பயணம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. கட்சியின் தலைவராக அவர் பொறுப்பேற்ற பிறகு, உலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சியாக பாஜக வளர்ந்துள்ளது என்றார் அவர்.
இந்தப் பயணத்தின்போது, பாஜகவின் ஊடக அணியினர் உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரை அமித் ஷா சந்தித்துப் பேசுகிறார். இந்தச் சந்திப்பின்போது, மக்களவைத் தேர்தலுக்கு தயாராவது குறித்து அவர்களிடம் ஆலோசனை நடத்த உள்ளார். அதைத் தொடர்ந்து, மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து முதல்வர் நிதீஷ் குமாருடன் அவர் ஆலோசனை நடத்த இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், பிகாரில் பாஜக கூட்டணி 31 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அந்தக் கூட்டணியில் தற்போது ஜேடியு இணைந்துள்ளதால், தொகுதிகளைப் பங்கிட்டுக் கொள்வது சவாலான பணியாக உள்ளது.
இதனிடையே, பாஜகவுடன் கருத்து வேறுபாடு ஏற்படக் கூடாது என்பதற்காக, அமித் ஷாவின் வருகையையொட்டி, மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பாக, கருத்து தெரிவிப்பதற்கு ஜேடியு செய்தித் தொடர்பாளர்களுக்கு அக்கட்சித் தலைமை கட்டுப்பாடு விதித்திருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன், 2019 மக்களவைத் தேர்தலில், பிகாரில் அதிக தொகுதிகளில் ஜேடியு போட்டியிடும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் கே.சி.தியாகி கூறியிருந்தார். அதற்கு, அக்கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரும், நிதீஷ் குமாருக்கு நெருக்கமானவர்களில் ஒருவருமான ஆர்.சி.பி.சிங் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அரசியல் ஜனநாயகத்தில் அனைவரும் சமம். ஒரு குடும்பத்தில் பெரியவர், சிறியவர் என்ற பதம் சரியாக இருக்காது' என்று அவர் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com