பாலியல் புகார்: கேரள பாதிரியார் சரண்

கேரள மாநிலத்தில் பெண்ணை மிரட்டி நீண்ட காலமாக பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள 5 பாதிரியார்களில் ஒருவர் வியாழக்கிழமை காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

கேரள மாநிலத்தில் பெண்ணை மிரட்டி நீண்ட காலமாக பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள 5 பாதிரியார்களில் ஒருவர் வியாழக்கிழமை காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
மலங்கரா சிரியன் ஆர்தோடக்ஸ் தேவாலயத்தைச் சேர்ந்த ஜாப் மேத்யூ தற்போது சரணடைந்துள்ளார். முன்னதாக, இவர் உள்பட மூன்று பாதிரியார்கள் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவை கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கேரள மாநிலம், கொல்லம் பகுதியில், திருமணத்துக்கு முன் பாதிரியார் ஒருவருடன் நெருங்கிப் பழகியதற்காக, பாவ மன்னிப்பு கேட்பதற்காக மலங்கரா சிரியன் ஆர்த்தோடக்ஸ் தேவாலயத்துக்கு சென்ற பெண்ணை, அங்குள்ள பாதிரியார் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
அதன் பின்னர், மேலும் 4 பாதிரியார்கள் அந்தப் பெண்ணை மிரட்டி தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவர் கடந்த மாதம் அதிரடியாக புகார் கிளப்பியதன் மூலம் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில், கேரள குற்றப்புலனாய்வு காவல் துறையினர் இந்த விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட 5 பேரில் 4 பாதிரியார்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தனர்.
இதையடுத்து, அந்த பாதிரியார்களில் ஆப்ரஹாம் வர்கீஸ், ஜாப் மேத்யூ மற்றும் ஜெய்ஸ் கே ஜார்ஜ் ஆகிய மூவர் கேரள உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை நீதிமன்றம் விசாரித்தபோது, பெண்ணை பாதிரியார்கள் இரையை போன்று பயன்படுத்தியதாகவும், நியாயமற்ற வகையில் பயன்படுத்திக் கொண்டதாகவும் கருத்து தெரிவித்தது. மேலும், அவர்களது முன்ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்தச் சூழலில், பாதிரியார் ஜாப் மேத்யூ, குற்றப்புலனாய்வு காவல்துறையினரிடம் சரண் அடைந்துள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com