பொருளாதார வளர்ச்சி: 6-ஆவது இடத்தில் இந்தியா

உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா, 6-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளதாக உலக வங்கியின் ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது.

உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா, 6-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளதாக உலக வங்கியின் ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது. மேலும், விரைவில் 5-ஆவது இடத்தில் இருக்கும் பிரிட்டனை முந்தக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக வங்கி ஆய்வுத் தகவலின்படி, கடந்த 2017-ஆம் ஆண்டு இந்தியா ரூ.176.86 லட்சம் கோடி மதிப்பிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் 6-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதனால், ரூ.176.18 லட்சம் கோடி மதிப்பில் மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கொண்ட பிரான்ஸ் 7-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டது.
பிரிட்டன் ரூ.178.91 லட்சம் கோடி மதிப்பிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் 5-ஆவது இடத்தில் இருக்கிறது. உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக அமெரிக்கா ரூ.1,324 லட்சம் கோடி மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் முதலிடத்தில் இருக்கிறது. சீனா ரூ.835.13 லட்சம் கோடி உற்பத்தியுடன் 2-ஆவது இடத்திலும், ஜப்பான் ரூ.332.55 லட்சம் கோடி உற்பத்தியுடன் 3-ஆவது இடத்திலும் உள்ளன.
ஜெர்மனி ரூ.250.61 லட்சம் கோடி மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் 4-ஆவது இடத்தில் இருக்க, பிரேசில், இத்தாலி, கனடா நாடுகள் முறையே 8, 9 மற்றும் 10-ஆவது இடங்களில் உள்ளன.
இந்தியாவைப் பொருத்த வரையில், கடந்த ஆண்டுகளில் நாட்டில் தொழில் செய்வதற்கு உகந்த சூழலை மேம்படுத்தும் வகையிலான பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. அதில், ஜிஎஸ்டி மற்றும் திவால் சட்டம் உள்ளிட்டவையும் அடங்கும்.
மத்திய அரசின் செலவு மற்றும் முதலீடுகளின் தாக்கத்தால், நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது கடந்த 7 காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு 2018 மார்ச்சுடன் முடிந்த 3 மாதங்களில் 7.7 சதவீதம் அதிகரித்துள்ளது.
பன்னாட்டு நிதியம் (ஐஎம்எஃப்) கடந்த ஏப்ரலில் வெளியிட்ட உலக பொருளாதார மதிப்பீட்டின் படி, இந்தியப் பொருளாதாரத்தின் மதிப்பு ரூ.178.22 லட்சம் கோடியாக உள்ளது. இதுவே, பிரான்ஸ் பொருளாதாரத்தின் மதிப்பு ரூ.176.18 லட்சம் கோடியாகவும், பிரிட்டனின் பொருளாதார மதிப்பு ரூ.178.91 லட்சம் கோடியாகவும் உள்ளது.
இந்தியாவின் இந்த பொருளாதார வளர்ச்சியானது எதிர்பார்த்த ஒன்றுதான் என நீதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com