மேலும் சில பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி குறையும்

அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், குறிப்பிட்ட சில பொருள்களுக்கான வரி விகிதத்தை குறைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் பியூஷ்
மேலும் சில பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி குறையும்

அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், குறிப்பிட்ட சில பொருள்களுக்கான வரி விகிதத்தை குறைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். அதேவேளையில் வரி வருவாயைப் பாதிக்காத வகையில் அந்நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் ஒரே வரிவிதிப்புக்கு வழிவகுக்கும் ஜிஎஸ்டி நடைமுறை, கடந்த ஆண்டு ஜூலை மாதம் அமல்படுத்தப்பட்டது. அதன் மூலம் கடந்த நிதியாண்டில் மொத்தம் ரூ.7.41 லட்சம் கோடி வரி வருவாய் அரசுக்கு கிடைத்துள்ளது. நிகழ் நிதியாண்டைப் பொருத்தவரை கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் ரூ.1.03 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூலாகியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன. 
இந்நிலையில், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் வரும் 21-ஆம் தேதி நடைபெறுகிறது. பியூஷ் கோயல் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் மாநில நிதியமைச்சர்கள், உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். குறிப்பிட்ட சில பொருள்களுக்கான ஜிஎஸ்டி வரி விகிதங்களை திருத்தியமைப்பது தொடர்பாக அப்போது ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.
அதேபோன்று வரிதாக்கல் நடைமுறைகளை எளிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் அந்தக் கூட்டத்தில் இறுதிசெய்யப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனிடையே, இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பியூஷ்கோயல் தில்லியில் வியாழக்கிழமை கூறியதாவது:
இதுவரை 328 பொருள்கள் மற்றும் சேவைகள் மீதான வரி விகிதத்தை ஜிஎஸ்டி கவுன்சில் குறைத்துள்ளது. தேவைப்பட்டால் மேலும் சில பொருள்களின் மீதான வரியைக் குறைப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். அரசின் வரி வருவாயை பாதிக்காத வகையில் அத்தகைய முடிவுகள் எடுக்கப்படும் என்றார் அவர்.
இதனிடையே, வரிப் பிரச்னைகள் தொடர்பாக நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் குறித்து செய்தியாளர்கள் பியூஷ் கோயலிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
நீதிமன்றங்களில் வரி பிரச்னைகள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்கள் நிலுவையில் இருந்து வருகிறது. இதன் காரணமாக ரூ.7.6 லட்சம் கோடி வரித் தொகை முடங்கியிருப்பதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான வரித் தொகையில் ஏதேனும் பிரச்னை இருந்தால் மட்டுமே நீதிமன்றங்கள் அல்லது தீர்ப்பாயங்களில் முறையிட முடியும். இந்நிலையில், அந்த வரம்பை அண்மையில் மத்திய அரசு உயர்த்தியது. இதனால், வழக்கு விசாரணையால் முடங்கியுள்ள வரித் தொகையில் தற்போது ரூ.5,600 கோடி குறைந்துள்ளது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com