பாபர் மசூதி ஹிந்து தலிபான்களால் இடிக்கப்பட்டது: உச்ச நீதிமன்றத்தில் வாதம்

அயோத்தியில் பாபர் மசூதி ஹிந்து தலிபான்களால் இடிக்கப்பட்டது என்று அயோத்தி வழக்கில் முக்கிய மனுதாரரான எம்.சித்திக்கின் வாரிசுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் பாபர் மசூதி ஹிந்து தலிபான்களால் இடிக்கப்பட்டது என்று அயோத்தி வழக்கில் முக்கிய மனுதாரரான எம்.சித்திக்கின் வாரிசுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளில் பாமியான் புத்த சிலை உடைக்கப்பட்டது. அதேபோல இந்தியாவில் ஹிந்து தலிபான்கள் இந்தக் காரியத்தை செய்துள்ளனர்' என்று மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராஜீவ் தவாண் தெரிவித்தார்.
அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ். அப்துல் நாசீர் ஆகியோர் அடங்கி அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்குரைஞர் ராஜீவ் தவாண் கூறியதாவது:
பாபர் மசூதியை சில சமூகவிரோதிகள் இடித்துவிட்டார்கள் என்று எளிதாகக் கூறுவதை ஏற்க முடியாது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் புத்தர் சிலையை உடைத்ததைப்போல இங்கு ஹிந்து தலிபான்கள் பாபர் மசூதியை இடித்துள்ளார்கள். இது நிகழ்ந்திருக்கக் கூடாது என்றார்.
அப்போது, ஷியா முஸ்லிம் வக்ஃபு வாரியம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் வாதிடுகையில், "மிர் பாகி என்ற ஷியா முஸ்லிமால் பாபர் மசூதி கட்டப்பட்டது. எனவே, ஹிந்துக்களுடன் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய பகுதியை ஹிந்து அமைப்புகளுக்கு விட்டுக் கொடுக்க ஷியா வக்ஃபு வாரியத்துக்கு உரிமை உண்டு' என்றார்.
இதையடுத்து, வாதிட்ட ராஜீவ் தவாண், "1946-ஆம் ஆண்டிலேயே பாபர் மசூதி சன்னி முஸ்லிம்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது. எனவே, இதில் தலையிட ஷியா வக்ஃபு வாரியத்துக்கு எவ்வித உரிமையும் இல்லை' என்றார்.
உத்தரப் பிரதேச அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், "வழக்கில் தொடர்பில்லாத விஷயங்களை எதிர் மனுதாரர் பேசி வருகிறார்' என்று குற்றம்சாட்டினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com