ராமர் கோயில் அமைத்துவிட்டால் நமது குழந்தைகளுக்கு வேலை கிடைக்குமா? பகுஜன் சமாஜ் தலைவர் கேள்வி

கங்கை நதி, மாடு, மாட்டின் சாணம், மாட்டின் கோமியம் உள்ளிட்டவற்றை மட்டுமே மையப்படுத்தி வாக்கு கேட்கும் கட்சி பாஜக தான் என்று பதவி நீக்கம் செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் சரமாரியாகப் பேசியுள்ளார்
ராமர் கோயில் அமைத்துவிட்டால் நமது குழந்தைகளுக்கு வேலை கிடைக்குமா? பகுஜன் சமாஜ் தலைவர் கேள்வி

கங்கை நதி, மாடு, மாட்டின் சாணம், மாட்டின் கோமியம் உள்ளிட்டவற்றை மட்டுமே மையப்படுத்தி வாக்கு கேட்கும் கட்சி பாஜக தான் என்று பதவி நீக்கம் செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் சரமாரியாகப் பேசியுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜெய பிரகாஷ் சிங், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல், பிரதமர் பதவிக்குத் தகுதியற்றவர் என்று விமர்சித்திருந்தார்.  

இந்நிலையில் அவரை பதவி நீக்கம் செய்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, செவ்வாய்கிழமை நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்நிலையில், தனது ஆதரவாளர்களுடன் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பகுஜன் சமாஜ் தலைவர் ஜெய பிரகாஷ் சிங் பேசியதாவது:

நாடு முழுவதும் பல லட்சம் ராமர் கோயில்கள் உள்ளன. நாம் அனைவரும் ராமர் மீது நம்பிக்கை வைத்திருந்தாலும், மற்றொரு ராமர் கோயில் கட்டிவிட்டால் அதற்காக நமது குழந்தைகளுக்கு வேலை கிடைத்து விடுமா? ராமரின் பெயரில் பிச்சை கேட்கலாம் ஆனால் வாக்கு சேகரிக்கக் கூடாது. நீங்கள் ராமரை வைத்துக்கொண்டு ஆட்சியை எங்களிடம் தாருங்கள். இந்தியாவை எவ்வாறு நிர்வகிப்பது என்று நாங்கள் காட்டுகிறோம் என்று எனது சமூகத்தினர் அனைவரும் அவர்களிடம் கூறுங்கள். 

வாக்கு அரசியலில் பாஜக தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்த நாடு முழுவதும் நரேந்திர மோடிக்கு அஞ்சினாலும், அவரே அஞ்சும் ஒரு நபர் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி தான். கங்கை நதி, மாடு, மாட்டின் சாணம், மாட்டின் கோமியம் உள்ளிட்டவற்றை மட்டுமே மையப்படுத்தி வாக்கு கேட்கும் கட்சி பாஜக தான். அதில் தவறு எதுவும் இல்லை. ஆனால் அனைத்து தவறும் இந்த நாட்டின் வாக்காளர்களுடையதுதான். 

ஒருபுறம் மாடு நமது தாய் போன்றது என்று கூறுவார்கள். இருப்பினும் மறுபுறம் அவர்களுடைய சொந்த தாய்மார்களை முதியோர் இல்லங்களில் கொண்டு சேர்ப்பார்கள். மாடு என்பது மிகவும் சாதுவான ஒரு மிருகம். அது குறைந்த அளவில் உணவு எடுத்துக்கொண்டு நமக்கு அதிகளவில் பால் தரும். எனவே ஒரு மாட்டினை எவ்வாறு நமது தாய்க்கு இணையாக நினைப்பது. நமக்கு உயிர்கொடுத்தவர்கள் நமது தாய்மார்கள். 

சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ரூ.2-க்கு அரிசி, இலவச லேப்டாப் மற்றும் இணைய வசதி என்பன போன்ற இலவசங்களை வாரி வழங்கி தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்தது. ஆனால் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, தரமான கல்வி மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவதாக தெரிவித்தார். மாயாவதி மட்டும் ஆட்சிக்கு வந்திருந்தால், மக்கள் ரூ.2 அரிசிக்கு ஏங்கித் தவிக்கத் தேவையில்லை. ரூ.200 கொடுத்து அரிசி வாங்கும் நிலைக்கு உயர்ந்திருப்பார்கள். எனவே இதுபோன்ற இலவச திட்டங்களுக்காக பிச்சை எடுப்பதை வாக்காளர்கள் தவிர்க்க வேண்டும். 

காங்கிரஸ் தலைவர் ராகுல், இந்திய அரசியலில் எக்காலத்திலும் உயர்ந்த நிலைக்கு வர முடியாது. மாயாவதி மட்டும் இந்தியாவின் பிரதமரானால், ஒவ்வொருவருக்கும் தங்கள் தற்காப்புக்காக ஆயுதம் வைத்துக்கொள்ளும் உரிமையை வழங்குவார்.  ராணுவத்திடம் இருந்து ஆயுதங்களைப் பிரிக்க முடியாது. அவ்வாறு செய்தால் ராணுவம் இருக்காது. எனவே உங்கள் அனைவரின் பாதுகாப்புக்கும் ஒரே வழி தனிப்பட்ட முறையில் ஆயுதம் வைத்திருப்பது மட்டும் தான். உத்தர பிரதேசத்தில் அனைவருக்கும் பாதுகாப்புக்காக ஆயுதம் வைத்திருக்க அனுமதி கொடுத்த மாயாவதியால் மட்டுமே இந்தியாவில் உள்ள அனைவருக்கும் அதை ஏற்படுத்தி தர முடியும். இது நமது தற்காப்புக்காக மட்டும்தானே தவிர அடுத்தவர்களை வஞ்சிப்பதற்கு அல்ல.  இந்த நாட்டின் ஒரே மாற்று சக்தி மாயாவதி மட்டும் தான். ஏனென்றால் அவர் வாழும் கடவுள் ஆவார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com