ஒரே வேட்பாளர் 2 தொகுதிகளில் போட்டியிட தடை கோரும் மனுவுக்கு மத்திய அரசு எதிர்ப்பு

ஒரே வேட்பாளர் இரு தொகுதிகளில் போட்டியிட தடை விதிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவுக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஒரே வேட்பாளர் இரு தொகுதிகளில் போட்டியிட தடை விதிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவுக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் அஸ்வனி குமார் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், ஒரே வேட்பாளர் இரு தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டிலும் வெற்றி பெற்றால் ஒரு தொகுதியில் உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டியுள்ளது; இது, அந்த தொகுதி மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்பதுடன், அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால், கூடுதல் நிதி செலவாகிறது. எனவே, ஒரே வேட்பாளர் இரு தொகுதிகளில் போட்டியிடுவதை அனுமதிக்கும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 33 (7) பிரிவை செல்லாததாக அறிவிக்க வேண்டும்' என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு மீது பதிலளிக்கும்படி, மத்திய சட்ட அமைச்சகத்துக்கு உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது, மத்திய சட்ட அமைச்சகம் தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தேர்தல் சீர்த்திருத்தங்களைப் பொருத்தவரை, நாடாளுமன்ற நடைமுறைகளின்படியே மேற்கொள்ள முடியும். இந்த விவகாரத்தில் நீண்ட கால அடிப்படையிலான நடைமுறைகள் அடங்கியுள்ளன. அத்துடன், ஒரே வேட்பாளர் இரு தொகுதிகளில் போட்டியிடுவதை தடுக்கும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் மாற்றம் செய்யும்போது, அதுசார்ந்த மேலும் பல சட்டங்களில் மாற்றங்கள் செய்ய வேண்டி வரும்.
மேலும், ஒரே வேட்பாளர் இரு தொகுதிகளில் போட்டியிடும் நடைமுறையால் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக பொதுவான குற்றச்சாட்டு மனுவில் முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்குரிய உறுதியான காரணங்கள் முன்வைக்கப்படவில்லை. எனவே, மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com