குமாரசாமியின் கண்ணீர் அரசியலுக்கு உதவுமா? என்ன சொல்கிறார்கள் நிபுணர்கள்??

பொது நிகழ்ச்சி ஒன்றில் கர்நாடக முதல்வர் குமாரசாமி கலந்து கொண்டு பேசுகையில் கண்ணீர் விட்டு அழுதது பல்வேறு விமரிசனங்களை எழுப்பியுள்ளது.
குமாரசாமியின் கண்ணீர் அரசியலுக்கு உதவுமா? என்ன சொல்கிறார்கள் நிபுணர்கள்??

பொது நிகழ்ச்சி ஒன்றில் கர்நாடக முதல்வர் குமாரசாமி கலந்து கொண்டு பேசுகையில் கண்ணீர் விட்டு அழுதது பல்வேறு விமரிசனங்களை எழுப்பியுள்ளது.

பெங்களூரில் உள்ள மஜத தலைமை அலுவலகத்தில் ஜூலை 14-இல் நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்று பேசிய முதல்வர் குமாரசாமி, "உங்களுடைய அண்ணனோ, தம்பியோ முதல்வராகி விட்டார் என நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்.  வாழ்த்துத் தெரிவிக்க விதானசெளதாவில் மலர்கொத்துகளோடு காத்துகொண்டு இருக்கிறீர்கள். முதல்வரான பிறகு மகிழ்ச்சியாக இல்லை. சிவனை போல்,  மனவலியை நஞ்சாக உண்டு, உங்களுக்கு அமுதத்தை கொடுத்துகொண்டிருக்கிறேன். இந்தப் பதவியை கடவுள் கொடுத்திருக்கிறார்.  கடவுளின் விருப்பப்படி, எத்தனை நாட்கள் நான் பதவியில் இருக்க வேண்டும் என நினைக்கிறாரோ, அத்தனை நாட்கள் முதல்வராக இருப்பேன். அதுவரை கர்நாடக மக்களுக்கு நல்லது செய்வேன். என் தந்தை தேவகவுடாவின் நிறைவேறாத ஆசை எல்லாவற்றையும் நிறைவேற்றுவேன்" என்று கூறிக்கொண்டே உணர்ச்சிவயப்பட்டு கண்ணீர்விட்டு அழுத்தார். 

இதுகுறித்து கர்நாடக பாஜகவின் டிவிட்டர் பக்கத்தில், "மிகச் சிறந்த நடிகர் விருது அவருக்கு (குமாரசாமி) அளிக்கப்பட வேண்டும். நமது நாடு அதிக எண்ணிக்கையிலான திறமையான நடிகர்களை கொண்டிருக்கிறது. அந்தப் பட்டியலில் மேலும் ஒரு நடிகர் இணைந்துள்ளார். 

நடிப்பு திறமையை வெளிப்படுத்தி குமாரசாமி மக்களை முட்டாள்களாக்குகிறார்' என்று கூறியிருந்தது.

கர்நாடக துணை முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜி.பரமேஸ்வர் கூறுகையில், 'குமாரசாமி கட்டாயம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அவர் மகிழ்ச்சியாக இருந்தால்தான் நாங்கள் மகிழ்ச்சியுடன் இருக்க முடியும்' என்றார்.

சட்டப்பேரவைத் தேர்தலின் போது பல்வேறு பகுதிகளில் நடந்த பிரசாரத்தின் போது வாக்காளர்கள் முன்பு கண்ணீர்விட்டு அழுத குமாரசாமி, "என்னை உயிரோடு பார்க்க வேண்டும் என்றால், என்னை வெற்றி பெறச் செய்யுங்கள்" என்று கேட்டுக் கொண்டார்.

இப்படி அழுது இரண்டு மாத காலம் ஆகியிருக்காது, முதல்வராகவும் ஆகிவிட்டார். அப்படி ஆன பிறகும், மீண்டும் அதே கண்ணீர், காரணம் மட்டும் மாறியிருக்கிறது.

இந்த கண்ணீரால் குமாரசாமியைப் பற்றி தேசிய அளவில் பல்வேறு விமரிசனங்கள் எழுந்துள்ளன. நடிகர் என குமாரசாமியை பாஜக விமரிசித்துள்ள நிலையில், ஆதரவு கொடுத்து முதல் இடத்தில் அமரவைத்த பிறகும் இவர் இப்படி அழுவது ஏன் என்று காங்கிரஸ் ஆச்சரியம் கலந்த வருத்தத்தோடு பார்க்கிறது.

ஒரு முதல்வராக பலமான நபராக செயல்பட்டு, மக்களிடையே நல்மதிப்பைப் பெறுவதைவிட, மக்களிடம் இருந்து இரக்கத்தைப் பெற்று, தான் ஒரு பரிதாபத்துக்குரிய நபராக மக்கள் மனதில் இடம்பிடிப்பது எளிதான காரியம் என்று குமாரசாமி கருதுவதாகவும் கூறப்படுகிறது.

தான் முதல்வராவதற்கு முன்பு தனக்கு ஆதரவு அளித்தவர்களை தக்க வைத்துக் கொள்ள இந்த கண்ணீர் உதவும் என்று குமாரசாமி கருதுவதாக அரசியல் நிபுணர் டாக்டர் சந்தீப் ஷாஸ்திரி கூறுகிறார். இதுபோல கண்ணீர் விடும் அரசியலை, அவர் தனது  தந்தை தேவெ கௌடவிடம் இருந்து கற்றிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

தேர்தல் பிரசாரத்தின் போது தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் போனதற்கு மக்களிடம் மன்னிப்புக் கேட்கும் வகையிலும் இந்த கண்ணீர் அமைந்திருப்பதாகவும் கருதப்படுகிறது.

கூட்டணி ஆட்சியாலும், பல்வேறு அதிகாரவரம்புகளாலும், தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்க முடியாமல் சூழ்நிலைக் கைதியாகியிருக்கும் தனது நிலையை வெளி உலகுக்குக் காட்டுவதாகவும் இந்த கண்ணீர் அமைந்துள்ளது.

 இதுபோன்று செய்தியாளர் சந்திப்பு, பொதுக் கூட்டங்கள் என பல அரசியல் நகர்வுகளின் போது தேவெ கௌடா கண்ணீர் வடித்துள்ளார். அவரது பாணியில், குமாரசாமியும் பல சந்தர்ப்பங்களில் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இதன் மூலம், தான் ஒரு நேர்மையானவன், எளிய மனிதன் என்ற பிம்பங்களை மக்கள் முன் ஏற்படுத்த முடிந்தது என்றும் அவர் நம்புகிறார். 

ஆனால், அடிக்கடி அழுவது அரசியலுக்கு உதவாது என்றும், மிக அசாதாரண சூழ்நிலையில் மட்டுமே அழுகையை கருவியாகக் கையாள முடியும் என்றும், அடிக்கடி பயன்படுத்தினால் அது பூமராங் போல திரும்பிவிடும் என்றும் அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழக அரசியல் நிபுணர் நாராயணா கூறுகிறார்.

பிரச்னைகளைக் கையாள முடியாமல், முதல்வர் எனும் பதவியை சரியாக நிர்வகிக்கப் போதுமான திறனற்று உள்ளதையே இந்த அழுகை காட்டுகிறது. இதுபோன்று தான் ஒரு பாதிக்கப்பட்ட நபர் என்ற தோற்றத்தை ஏற்படுத்துபவரை மக்கள் விரும்ப மாட்டார்கள். பிரச்னையை தைரியமாகவும், திறமையாகவும் கையாளும் நபரையே மக்கள் விரும்புவார்கள் என்பதை குமாரசாமி புரிந்து கொள்ளும் நேரம் வரும் என்று நாராயணா கூறுகிறார்.

இந்த கண்ணீர் மூலம் கர்நாடக கூட்டணி ஆட்சி மீது மக்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் ஒரு எதிர்மறையான சிந்தனையே உருவாகும். இது கூட்டணிக்கும், ஆட்சிக்கும் நல்லதல்ல. 

குமாரசாமியை டென்ஷன் ஆக வேண்டாம், அவ்வாறு அழுதால் நானும் அழுதுவிடுவேன் என்றும், எங்கள் கிராமத்துக்கு வந்து ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் ஒரு மழலை குமாரசாமியை அழைக்கும் விடியோ சமூக தளங்களில் வைரலாகி வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com