தில்லியில் தீவிரமடைகிறது "மலேரியா'!

தில்லியில் மலேரியா நோய் தீவிரமடைந்துள்ளது. ஜூலை மாதத்தில் இதுவரை 17 பேர் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தில்லியில் தீவிரமடைகிறது "மலேரியா'!

தில்லியில் மலேரியா நோய் தீவிரமடைந்துள்ளது. ஜூலை மாதத்தில் இதுவரை 17 பேர் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையும் சேர்த்தால், நிகழாண்டில் இதுவரை மலேரியாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: 
தில்லியைப் பொருத்தவரை கொசுக்கள் மூலம் பரவக் கூடிய மலேரியா நோயின் தாக்கம் வழக்கமாக ஜூலை மாதம்தான் ஆரம்பிக்கும். ஆனால், நிகழாண்டில் மலேரியாவின் தாக்கம் பிப்ரவரி மாதமே ஆரம்பித்துவிட்டது. பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களில் மலேரியாவின் தாக்கம் குறைவாகக் காணப்பட்டது. ஆனால், மே மாதத்தில் 17 பேர், ஜூனில் 25 பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஜூலை மாதத்தில் மலேரியா நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்த மாதத்தில் இதுவரை 17 பேர் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு தில்லி மாநகராட்சிப் பகுதியில்தான் மலேரியாவின் தாக்கம் மற்ற இரு மாநகராட்சிகளையும் விட அதிகமாக உள்ளது என்றனர். 
இதுகுறித்து தில்லி அரசு மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர் கூறுகையில், "தில்லியில் டெங்கு பாதிப்பை ஒப்பிடுகையில், எப்போதுமே மலேரியா பாதிப்பு குறைவாகவே இருக்கும். ஏனென்றால், இரண்டும் வெவ்வேறு வகையிலான கொசுக்கள் கடிப்பதால் ஏற்படுகிறது. எனினும், மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும். கை, கால்களை முழுவதுமாக மறைக்கும் வகையில் ஆடைகளை அணிவது, வீட்டுச் சுற்றுப்புறங்களில் கொசுப் பெருக்கம் ஏற்படாத வகையில் பார்த்து கொள்வது. பயன்பாடின்றி இருக்கும் கூலர்களில் உள்ள தண்ணீரை அகற்றுவது போன்ற நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும்' என்றார்.
டெங்கு பாதிப்பு: தில்லியில் நிகழ் பருவ காலத்தில் இதுவரை டெங்குவுக்கு 36 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜனவரியில் 6 பேர், பிப்ரவரியில் 3 பேர், மார்ச்சில் ஒருவர், ஏப்ரலில் இருவர், மே மாதத்தில் 10 பேர், ஜூனில் 8 பேர் , ஜூலையில் இதுவரை 6 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், சிக்குன்குனியாவுக்கு இதுவரை 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இந்த நோய்களால் இதுவரை உயிரிழப்புக்கள் ஏதும் ஏற்படவில்லை என மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. "டெங்கு, சிக்குன்குனியா ஆகிய நோய்களைப் பரப்பும் கொசுக்கள் நன்னீரில் வளரக்கூடியவை. மலேரியாவைப் பரப்பக் கூடிய அனாபிலஸ் வகை கொசுக்கள், நன்னீர் மட்டுமன்றி, கலங்கிய நீரிலும் வளரக் கூடியவை. எனவே, சுற்றுப்புறத்தில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்வதன் மூலம் கொசுப் பெருக்கத்தை தவிர்க்கலாம். 
47,213 வீடுகளில் கொசுப் பெருக்கம் உள்ளதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். 53,137 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது' என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். 

கொசுப் பெருக்கத்தைத் தடுக்கத் தவறினால் "எஃப்ஐஆர்'
கொசுப் பெருக்கத்தை தடுக்க தவறுபவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்படும் என தெற்கு தில்லி மாநகராட்சி (எஸ்டிஎம்சி) மேயர் நரேந்தர் சாவ்லா தெரிவித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் திங்கள்கிழமை கூறியதாவது: 
தில்லியில் கொசுக்களால் பரவும் நோய்களான மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா ஆகியவை வேகமாகப் பரவி வருகின்றன.பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கொசுக்களால் பரவும் நோய்களின் தாக்கம் அதிகரித்துள்ளது. கொசுப் பெருக்கத்தை தடுக்கத் தவறியவர்கள் மீது இதுவரை அபராதம்தான் விதிக்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த மாதம் தொடக்கத்திலிருந்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது. இதன்படி, கிரேட்டர் கைலாஷ் பகுதியில் கொசுப் பெருக்கத்தை தடுக்கத் தவறிய 3 கட்டுமான நிறுவனங்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாநகராட்சிப் பகுதிகளில் கொசுப் பெருக்கம் தொடர்பாக வீடுவீடாக சோதனை மேற்கொள்ளப்படும். அப்போது கொசுப் பெருக்கத்தை தடுக்கத் தவறியவர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com