பாஜகவுக்கு எதிரான கட்சிகளுடன் கூட்டணி சேர தயார்: யெச்சூரி

மத்தியில் ஆட்சியில் இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக, பாஜகவுக்கு எதிரான கட்சிகளுடன் கூட்டணி சேரத் தயாராக இருப்பதாக

மத்தியில் ஆட்சியில் இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக, பாஜகவுக்கு எதிரான கட்சிகளுடன் கூட்டணி சேரத் தயாராக இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து சண்டீகரில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசை ஆட்சியில் இருந்து அகற்றுவதுதான் எங்கள் கட்சியின் முக்கிய நோக்கம். அதுதான் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நன்மையை தரும்.
இந்த இலட்சியத்தை அடைவதற்காக, பாஜகவுக்கு எதிரான கட்சிகளுடன் கூட்டணி அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தயாராக உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது குறித்து, கட்சியின் மாநில தலைமை முடிவு செய்யும்.
பஞ்சாபில் காங்கிரஸுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி அமைக்குமா? என கேட்கிறீர்கள். இதுகுறித்து காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை எதிலும் எங்கள் கட்சி ஈடுபடவில்லை. அதேநேரத்தில், பஞ்சாபில் சிரோமணி அகாலிதளம்-பாஜக கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம் ஆகும்.
மத்திய அரசின் ஆட்சியின்கீழ், தற்போது நாட்டில் நடக்கும் தவறுகள் குறித்து மக்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். எனவே மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின்மீது வெள்ளிக்கிழமை நடக்கும் விவாதத்தின்போது, மத்திய அரசின் தவறுகளை நாங்கள் எடுத்துரைப்போம்.
விவசாயிகள் தற்கொலை, விவசாய பயிர்களுக்கு குறைந்தப்பட்ச ஆதரவு விலை, விவசாயக் கடன் தள்ளுபடி போன்றவற்றுக்காக ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதியன்று நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு விவசாய சங்கங்களும், தொழிற்சங்கங்களும் அழைப்பு விடுத்துள்ளன. இந்த போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிக்கிறது.
கும்பல் தாக்குதல் சம்பவங்களை தடுப்பதற்கு, கடுமையான சட்டம் நிறைவேற்றப்பட வேண்டியது அவசியமாகும். ஏனெனில், தற்போது அமலில் இருக்கும் சட்டங்களால், இந்த குற்றங்களுக்கு தீர்வு காண முடியாது என்றார் சீதாராம் யெச்சூரி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com