விசாரணை அமைப்புகளை தவறாகப் பயன்படுத்தும் மத்திய அரசு: எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

சிபிஐ, அமலாக்கத் துறை போன்ற விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

சிபிஐ, அமலாக்கத் துறை போன்ற விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
மாநிலங்களவையில் ஊழல் தடுப்பு சட்டத் திருத்த மசோதா மீது வியாழக்கிழமை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் மீது மாநிலங்களவை காங்கிரஸ் எம்.பி.க்கள் குழு துணைத் தலைவர் ஆனந்த் சர்மா பேசியதாவது:
கடந்த 4 ஆண்டுகால பாஜக கூட்டணி அரசின் ஆட்சியில் ஊழல் அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், நாட்டின் பொருளாதாரநிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் பணத்துக்கு கூட பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வங்கிகளில் இருக்கும் நாட்டு மக்களின் பணத்தை, மெஹூல் சோக்ஸி, நீரவ் மோடி போன்றோர் வெளிநாட்டுக்கு எடுத்துச் சென்று விடுகின்றனர். எங்கள் கட்சியின் பிரதமர் (மன்மோகன் சிங்) இத்தகைய நபர்களை தனது வீட்டுக்கு அழைத்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதில்லை; டாவோஸுக்கு தன்னுடன் அழைத்துச் சென்றதுமில்லை.
வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் கருப்புப் பணம், நாட்டுக்கு திருப்பி கொண்டு வரப்பட்டு விட்டதாக மத்திய அரசு தெரிவிக்கிறது. ஆனால் இதற்கு நேர்மாறாக, சுவிட்சர்லாந்து வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கருப்புப் பணம் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. கருப்புப் பணத்தை மீட்டு, அதிலிருந்து மக்களின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்ற வாக்குறுதியும் பொய்யாகி விட்டது.
ஊழல் விவகாரத்தில் சிபிஐ, அமலாக்கத் துறை போன்ற விசாரணை அமைப்புகளை எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது. இதில் மத்திய அரசு இரட்டை நிலைப்பாட்டை கடைப்பிடிக்கிறது. ஆளுங்கட்சியைச் சேர்ந்த பல்வேறு மாநில முதல்வர்களுக்கு எதிராகவும் ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. ஆனால் இதன்மீது நடவடிக்கை எடுக்காமல், விசாரணை அமைப்புகள் அமைதியாக இருக்கின்றன.
ஊழல் தடுப்பு சட்டத் திருத்த மசோதாவில், லோக்பால் அல்லது லோக் ஆயுக்தா அனுமதியுடன், ஊழல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியிருக்கையில் கடந்த 4 ஆண்டுகால ஆட்சியில் இருந்த மத்திய அரசு, ஏன் லோக்பாலை ஏற்படுத்தவில்லை என்றார் ஆனந்த் சர்மா.
சமாஜவாதி உறுப்பினர் ரவி பிரகாஷ் வர்மா பேசியபோது, ஊழல் சம்பவங்களை தனிப்பட்ட சம்பவங்களாக பார்க்கக் கூடாது என்றும், அதற்கு முழுவதும் முடிவு கட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் சுகேந்து சேகர் ராய் பேசியபோது, ஊழல் தடுப்பு சட்டத் திருத்த மசோதாவில், லஞ்சம் வாங்குவோருக்கு 10 ஆண்டு சிறையும், லஞ்சம் கொடுப்போருக்கு 3 ஆண்டு சிறையும் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது; ஊழலில் அவர்கள் இருவருக்கும் சமமான பங்கு இருப்பதால், தண்டனையும் இருவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்றார்.
பிஜு ஜனதா தளம் உறுப்பினர் பிரசன்னா ஆச்சார்யா பேசியபோது, அரசு ஊழியர்கள் மோசமாக செயல்படுவதை தடுக்கும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் 13ஆவது பிரிவை மத்திய அரசு, தனது சட்டத் திருத்த மசோதாவில் நீர்த்து போக செய்து விட்டதாக குற்றஞ்சாட்டினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் கே.கே. ராகேஷ் பேசியபோது, நீதித்துறையில் ஊழல் அதிகரித்து விட்டது; இதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி. ராஜா பேசியபோது, லோக்பால் அமைப்பை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என்றார்.
இந்நிலையில், விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு மறுப்புத் தெரிவித்து பாஜக எம்.பி. ஷெவாய்த் மாலிக் பேசினார். அவர் கூறியதாவது:
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சிக்காலத்தில், ஊழல் வழக்கில் அமைச்சர்கள் கைதாவதும், பிறகு அவர்கள் சிறைக்கு சென்று திரும்பும் சம்பவங்களும் நடந்தன. ஆனால், பிரதமர் மோடி ஆட்சியின்கீழ் இந்த சூழ்நிலை முழுவதும் மாறிவிட்டது. ஊழலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டன. அரசின் நடவடிக்கையால், வெளிநாட்டு வங்கிகளில் இருந்த இந்தியர்களின் கருப்புப் பணம் ரூ.70 ஆயிரம் கோடி, நாட்டுக்கு திரும்பி கொண்டுவரப்பட்டது. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஆகியவையும் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டது. ஆனால், இத்தகைய வளர்ச்சி நடவடிக்கைகளை காங்கிரஸ் கவனிக்க விரும்பவில்லை என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com