125  கோடி இந்தியர்களுக்கு எங்கள் மீது நம்பிக்கை உள்ளது: பிரதமர் நரேந்திர மோடி

70 வருடங்களாக இந்த கறுப்புப் பணம் மற்றும் ஊழலை அனுபவித்து வந்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதையும் நான் அறிவேன்.  
125  கோடி இந்தியர்களுக்கு எங்கள் மீது நம்பிக்கை உள்ளது: பிரதமர் நரேந்திர மோடி

மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் மக்களவையில் வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம், காரசரமான விவாதத்துக்குப் பிறகு தோல்வி அடைந்தது.

நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக 126 வாக்குகளும், எதிராக 325 வாக்குகளும் பதிவாகின. கடந்த 4 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொண்டது இதுவே முதல் முறையாகும்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது:

நாடாளுமன்றத்தில் 3-ல் இரண்டு பங்கு ஆதரவு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு உள்ளது. இந்தியாவில் பிரிவினையை காங்கிரஸ் ஏற்படுத்துவதை இந்த நாடு நேற்று கண்டுகொண்டது. இதையே தான் கடந்த 1999-ஆம் வருடமும் அதற்கு முன்னரும் கூட காங்கிரஸ் செய்து வந்தது.

ஆந்திர மாநிலத்தின் மேம்பாட்டுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அனைத்து விதமான நலத்திட்டங்களையும் ஏற்படுத்தித் தரும் என்பதை ஆந்திராவில் உள்ள எனது சகோதர, சகோதரிகளுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். காங்கிரஸ் கட்சி என்னைக் குறித்தும், எனது பின்புலத்தைக் குறித்தும், எனது ஏழ்மை குறித்தும் எதுவேண்டுமானாலும் விமர்சிக்கட்டும். ஆனால் இனியாவது துல்லியத் தாக்குதலை கேவலமாக சித்தரிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். 

நெட் பேங்கிங் வசதி வருவதற்கு முன்பே ஃபோன் பேங்கிங் வசதியை காங்கிரஸ் கட்சி ஏற்படுத்திவிட்டது. அதன்மூலம் தங்களுக்கு தேவையானவர்களுக்கு மட்டும் கடன் வழங்க அழுத்தம் கொடுத்த வந்தது. இதனால்தான் நாட்டின் கடன் சுமை அதிகரித்தது. இதை தற்போதைய அரசாங்கம் சீர்செய்து வருகிறது. 

கண்களைப் பார்த்து என்னால் பேச முடிவதில்லை என்று காங்கிரஸ் கட்சியினர் கூறி வருகின்றனர். அது உண்மை தான். ஏனென்றால் அவர்களை ஒப்பிடும் போது நான் மிகவும் சிறியவன்தான். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், சர்தார் வல்லபாய் படேல், லோகநாயக் ஜே.பி., மொர்ராஜி தேசாய், சரண் சிங், சந்திரசேகர், பிரணாப் முகர்ஜி, தேவே கௌடா, சரத் பவார் போன்றவர்களை காங்கிரஸ் குடும்பம் எவ்வாறு கையாண்டது என்பதை நீங்களும் அறிவீர்கள்.

ஊழல் மற்றும் கறுப்புப் பணத்துக்கு எதிரான எனது நடவடிக்கைகள் தொடரும். இதனால் கடந்த 70 வருடங்களாக இந்த கறுப்புப் பணம் மற்றும் ஊழலை அனுபவித்து வந்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதையும் நான் அறிவேன்.  ஏழை மற்றும் சாமானியனின் வாழ்வாதாரத்தை உயர்த்தவே நாங்கள் பணி செய்து வருகிறோம். 

நம்முடைய விவசாயிகளுடன் இருப்பதை நான் எப்போதுமே விரும்புகிறேன். அவர்களின் கடின உழைப்பு தான் இந்தியாவை இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது. 125 கோடி இந்தியர்களுக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீது நம்பிக்கை உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவை முன்னேற்றி, இளைஞர்களின் கனவுகளை நிறைவேற்ற தேவையான மாற்றங்களை கொண்டு வர இந்த அரசு நிச்சயம் தொடர்ந்து முயற்சி செய்யும் என்று பதிவிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com