தேர்தல் வியூகம் வகுக்க தலைவர்களுடன் ராகுல் சந்திப்பு.... கட்சிக்குள் என்ன பேசிக்கிறாங்க தெரியுமா?

2019 தேர்தலுக்கு வியூகம் வகுக்க நாடு முழுவதும் உள்ள கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்துகிறார். 
தேர்தல் வியூகம் வகுக்க தலைவர்களுடன் ராகுல் சந்திப்பு.... கட்சிக்குள் என்ன பேசிக்கிறாங்க தெரியுமா?

2019 தேர்தலுக்கு வியூகம் வகுக்க நாடு முழுவதும் உள்ள கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்துகிறார். 

காங்கிரஸ் கட்சியில் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் படைத்த காரிய கமிட்டியை, அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கடந்த செவ்வாய்க்கிழமை மாற்றியமைத்தார். காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்று 7 மாதங்களில் காரியக் கமிட்டியை ராகுல் காந்தி மாற்றியமைத்தார்.  

இதற்கிடையில், மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாஜகவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை அடுக்கி ஆவேசமான உரையை மக்களவையில் வெள்ளிக்கிழமை ஆற்றினார்.

இந்நிலையில், இப்புதிய காரியக் கமிட்டியின் முதல் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த கூட்டம் நடைபெறும் அன்றைய தினமே காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்கள், செயலாளர்கள், மாநிலத் தலைவர்கள், சட்டப்பேரவை தலைவர்கள், நாடாளுமன்ற தலைவர்கள் அனைவருக்கும் ஒரு சிறப்பு கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் அழைப்பு விடுத்துள்ளார். இந்தக் கூட்டத்தில் 2019 தேர்தலுக்கான வியூகங்கள் வகுப்பது குறித்து ஆலோசனை நடத்த ராகுல் திட்டம் தீட்டியிருப்பதாக கூறப்படுகிறது.  

இந்த முதல் காரியக் கமிட்டி கூட்டத்தில் கட்சிகளுடனான கூட்டணி அமைப்பது உள்ளிட்ட கட்சியின் சவால்கள், கட்சி அமைப்பில் உள்ள பிளவுகள், மோடி அரசின் 4 ஆண்டு கால ஆட்சியை மதிப்பிடுவது மற்றும் தேசத்துக்கான மாற்றுப் பார்வையை முன்னிறுத்துவது குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளது.  
 
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது அன்பை வெளிப்படுத்துதல் குறித்து ராகுல் காந்தி பேசினார். மோடியின் பிரிவினை அரசியலுக்கு பதிலடி கொடுக்க அதே தன்மையை மையமாக வைத்து செயல்பட ராகுல் அறிவுரை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.    

விவசாயப் பிரச்னைகள், பொருளாதாரச் சரிவு ,வேலையில்லா திண்டாட்டம், வெளியுறவு கொள்கை உள்ளிட்ட விவகாரங்களுடன் ஜம்மு காஷ்மீர் பிரச்னை குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்க வாய்ப்பிருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகிறது. 

ராகுல் காந்தியுடன் நெருக்கமாக பணிபுரியும் தலைவர்கள் கூறுகையில்,

"புதிய காங்கிரஸ் உறுப்பினர்கள் ஓர் அணியாக இணைந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று ராகுல் விரும்புகிறார். அதில் பெரும்பாலோனோர் இளைஞர் காங்கிரஸ் பின்னணியில் இருந்து வந்தவர்கள். ராகுல் காந்தி பாணியுடன் இணைய,  சோனியா காந்திக்கு நெருக்கமான மூத்த காங்கிரஸ் தலைவர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

பிரதமர் மோடி உட்பட மொத்த தேசமும் வாக்களிக்கும் மனநிலைக்கு சென்றுவிட்டனர். அதனால், நாம் திட்டம் வகுத்து செயல்பட வேண்டும் என்று கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.  அவர் மேலும் கூறுகையில், 5 ஆண்டு சாதனைகள் குறைந்த எண்ணிக்கையிலேயே இருப்பதால், அரசியலில் மதச்சாயலை கொண்டு வந்து வாக்காளர்களை ஒன்றிணைக்க மோடி திட்டம் வகுக்கலாம் என்றார். 

அதற்கு பதிலளிக்கும் வகையில் மற்றொரு காங்கிரஸ் தலைவர் பேசுகையில், காங்கிரஸ் எப்போதுமே சமுதாயத்தின் அனைத்து தரப்பையும் ஒன்றிணைக்கும் வகையிலேயே கவனம் செலுத்தி வந்துள்ளது. ஆனால், பாஜக பிரச்சார இயந்திரங்களின் எதிர்மறை அரசியலால் அது அடிபட்டுவிடுகிறது. 

இதையடுத்து மூத்த காங்கிரஸ் காரியக் கமிட்டி தலைவர் ஒருவர் கூறுகையில், நாம் அவர்களை சமூக வலைதளங்களில் எதிர்கொள்ள வேண்டும். நமது செய்திகளை தேசம் முழுவதும் அனைத்து தரப்பினரிடமும் திறம்பட கொண்டு சேர்க்க வேண்டும் என்றார்.

மேலும், இந்தக் கூட்டம் மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்த 2 தினங்களுக்குள் நடைபெறுவதால் வரும் கூட்டத் தொடர் தினங்களில் பாஜகவை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் விவாதிக்கலாம்" என்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com