ஐஐடி-யில் மாணவியர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்: ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தல்

மாணவர்களை விட மாணவிகள் பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றும், இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் (ஐஐடி) அவர்களது சேர்க்கை குறைவாக உள்ளது.
ஐஐடி-யில் மாணவியர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்: ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தல்

மாணவர்களை விட மாணவிகள் பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றும், இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் (ஐஐடி) அவர்களது சேர்க்கை குறைவாக உள்ளது. இதனை அதிகரிக்க வேண்டும் என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசினார்.
கோரக்பூர் ஐஐடி-யில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 64-வது பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது:
2017-இல் ஐஐடி நுழைவுத் தேர்வு எழுதிய 1,60,000 பேரில் 30,000 பேர் மட்டுமே மாணவியர். அதே ஆண்டில் ஐஐடி-யில் இளநிலை பட்டப்படிப்பில் சேர்ந்த 10,878 பேரில் 995 பேர் மட்டும் மாணவியர். பொது தேர்வுகளில் மாணவியர் அதிக மதிப்பெண் பெறுகின்றனர். கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களிலும், மாணவர்களை விட மாணவியர் அதிக பதக்கங்களை வெல்லும் முனைப்பில் இருக்கிறார்கள். ஆனால் ஐஐடி-களில் சேரும் மாணவியர் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.
கோரக்பூர் ஐஐடி-யில் மொத்தம் 11,653 பேர் சேர்ந்துள்ளனர். இதில் 1,925 பேர் மட்டுமே மாணவிகள். இது 16 சதவீதத்துக்கும் சற்று அதிகம். இந்த நிலை மாற வேண்டும். பெண்களை உயர்கல்வி படிப்புகளில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களில் அதிக அளவில் ஈடுபடுத்த வேண்டும். இந்த செயலை செய்யாவிடில் சமூகத்தில் பெண்களின் நிலையை மேம்படுத்த முடியாது. இது சமூகத்தில் ஆண்-பெண் சமத்துவத்தை கடினமாக்குவதுடன் நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கும்.
சர்வதேச அளவில் நடைபெறும் மாநாடுகளில் பங்கு கொள்ள விரும்பும் பெண் ஆராய்ச்சியாளர்களுக்காக, கோரக்பூர் ஐஐடி, இன்போசிஸ் நிறுவனத்துடன் இணைந்து நிதியுதவி செய்ய உள்ள திட்டம் பாராட்டத்தக்கது.
மேற்கு வங்கத்தை பற்றி கூறுகையில், கோரக்பூர் ஐஐடி அமைந்திருக்கும் இந்த மாநிலம், வரலாற்றில் சாதனை படைத்த பல பெண்மணிகளை நாட்டிற்கு தந்துள்ளது. அதில் ஒருவர் இங்கே நம்முடன் அமர்ந்திருக்கும் முதல்வர் மம்தா பானர்ஜி. ஜே.சி. போஸ், எஸ்.என்.போஸ் ஆகியோரின் பங்களிப்பு நாட்டின் அறிவியல் ஆராய்ச்சியில் முக்கியத்துவம் வாய்ந்தது என்று ராம்நாத் கோவிந்த் பேசினார்.
பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில், கோரக்பூரில் படித்த மாணவர்கள் எதிர்காலத்தில் உலகில் எங்கு வாழ்ந்தாலும் சொந்த நாட்டையும், மாநிலத்தையும் மறந்து விடக் கூடாது. பெற்றோரையும், ஆசிரியர்களையும் மறக்காதீர்கள். இந்தியா அனைத்து மதம், ஜாதி மற்றும் மொழிகளை ஒன்றிணைந்தது. அந்த உணர்வை கோரக்பூர் மாணவர்கள் எப்போதும் வெளிப்படுத்த வேண்டும் ' என கூறினார்.
பல ஆண்டுகள் பின்னர் குடியரசு தலைவர், ஆளுநர், முதல்வர் என அனைவரும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுள்ளனர் என்று கல்லூரி இயக்குநர் பார்த்தா சக்ரவர்த்தி கூறினார். நிகழ்ச்சியில் 2,616 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. 7 மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் அளிக்கப்பட்டது. முன்னதாக, பெண்கள் விடுதி மற்றும் விருந்தினர்களின் கட்டடத்துக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பெயரை ராம்நாத் கோவிந்த் சூட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com