ஜிஎஸ்டி: மேலும் வரிச் சலுகைகள்: ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட பல்வேறு பொருள்களுக்கு வரி குறைப்பு; சானிடரி நாப்கினுக்கு வரி விலக்கு

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட பல்வேறு பொருள்களுக்கு சரக்கு-சேவை வரி விகிதம் (ஜிஎஸ்டி) குறைக்கப்பட்டுள்ளது. இதனால், அந்தப் பொருள்களின்
ஜிஎஸ்டி: மேலும் வரிச் சலுகைகள்: ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட பல்வேறு பொருள்களுக்கு வரி குறைப்பு; சானிடரி நாப்கினுக்கு வரி விலக்கு

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட பல்வேறு பொருள்களுக்கு சரக்கு-சேவை வரி விகிதம் (ஜிஎஸ்டி) குறைக்கப்பட்டுள்ளது. இதனால், அந்தப் பொருள்களின் விலை சற்று குறைய வாய்ப்புள்ளது.
 சானிடரி நாப்கினுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சானிடரி நாப்கின் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு சமூக நல அமைப்பினர் கடந்த ஓராண்டாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதனை ஏற்று, இந்த முடிவு எடுக்கப்பட்டது.
 நாடு முழுவதும் சரக்கு-சேவை வரி விதிப்பு முறை கடந்த ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. அதிலிருந்து, பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று ஜிஎஸ்டி வரி விகிதங்கள் குறைக்கப்பட்டு வருகின்றன.
 இந்நிலையில், ஜிஎஸ்டி கவுன்சிலின் 28-ஆவது கூட்டம், மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் தில்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு பொருள்களின் மீதான ஜிஎஸ்டி வரியைக் குறைப்பதற்கு முடிவு செய்யப்பட்டது.
 கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அமைச்சர் பியூஷ் கோயல், பின்னர் செய்தியாளர்களிடம் விவரித்தார். அவர் கூறியதாவது:
 சானிடரி நாப்கின், ராக்கி கயிறுகள், சிறு கைவினைப் பொருள்கள் ஆகியவற்றுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை, சானிடரி நாப்கினுக்கு 12 சதவீதம் வரி விதிக்கப்பட்டிருந்தது.
 ரூ.1000 வரையிலான மதிப்புள்ள காலணிகளின் மீதான வரி 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
 நடுத்தர வர்க்க மக்கள் அன்றாடம் பயன்படுத்தக் கூடிய பல்வேறு பொருள்களின் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது.
 அதாவது, 68 செ.மீ. அளவு வரையிலான தொலைக்காட்சிப் பெட்டிகள், விடியோ கேம்கள், வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், ஏ.சி. இயந்திரங்கள், வாட்டர் ஹீட்டர், வேக்குவம் கிளீனர்கள், கிரைண்டர், மிக்ஸி ஆகியவற்றின் மீதான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
 இதேபோல், வாசனை திரவியங்கள், அழகுசாதனப் பொருள்கள், முகச்சவர சாதனங்கள் ஆகிய பொருள்களின் மீதான வரியும் 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
 இதுதவிர, மின்சார இஸ்திரி பெட்டிகள், லித்தியம் அயன் பேட்டரிகள், முடி உலர்த்தும் சாதனம் (ஹேர் டிரையர்) ஆகியவற்றின் மீதான வரிகளும் குறைக்கப்பட்டுள்ளன. எத்தனால் மீதான வரி 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
 இதுதவிர, தரைகளில் பதிக்கப்படும் கோட்டா கற்கள் மற்றும் அதே தரம் கொண்ட உள்ளூர் கற்கள் ஆகியவற்றின் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
 ஜூலை 27 முதல் அமல்: இந்தப் புதிய விரி விகிதங்கள், வரும் 27-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
 ஆண்டுக்கு ரூ.5 கோடி வரை விற்றுமுதல் ஈட்டும் தொழில், வர்த்தக நிறுவனங்கள், காலாண்டு அடிப்படையில் வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்யலாம். இதனால், 93 சதவீத வரி செலுத்துவோர் பயனடைவார்கள்.மேலும் வரி கணக்கு தாக்கல் செய்யும் முறை எளிமையாக்கப்பட்டுள்ளது.
 பதிலி வரி செலுத்தும் நடைமுறை: ஜிஎஸ்டி வரி விதிப்பு நடைமுறையில் பதிவுபெறாத நிறுவனங்களிடம் இருந்து பொருள்கள் அல்லது சேவையைப் பெறும் வர்த்தகர்கள், அந்த நிறுவனங்களுக்குப் பதிலாக ஜிஎஸ்டி வரியைச் செலுத்த வேண்டும். இதற்கு பதிலி வரி செலுத்தும் நடைமுறை (ரிவர்ஸ் சார்ஜ் மெக்கானிசம்) என்று பெயர். இந்த நடைமுறையை அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு அமல்படுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது என்றார் பியூஷ் கோயல்.
 ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம், வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com