நவாஸை அரவணைத்த மோடி ராகுலை புறக்கணித்தது ஏன்? காங்கிரஸ் கேள்வி

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபை ஆரத் தழுவிய பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அரவணைக்காதது ஏன்? என்று அக்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபை ஆரத் தழுவிய பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அரவணைக்காதது ஏன்? என்று அக்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
 சொந்த நாட்டைச் சேர்ந்த குடிமக்களைக் காட்டிலும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மீதுதான் மோடிக்கு அதீத அன்பு உள்ளதா? என்றும் காங்கிரஸ் கட்சி வினா தொடுத்துள்ளது.
 நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவாதத்தில் ஆவேசமாக பேசிய ராகுல் காந்தி, அதன் பின்னர் பிரதமர் மோடியின் இருக்கைக்குச் சென்று அவரை கட்டித் தழுவினார். அதற்கு உடனடியாக எதிர்வினையாற்றாத பிரதமர் மோடி, சில விநாடிகள் கழித்து ராகுலுக்கு கைகொடுத்ததுடன், முதுகிலும் தட்டிக் கொடுத்தார்.
 மக்களவையில் இச்சம்பவத்தைக் குறிப்பிட்டு பேசிய மோடி, தனது இருக்கையை (பிரதமர் நாற்காலி) கைப்பற்ற ராகுல் அவசரம் காட்டுகிறார் என்று நகைச்சுவையாகக் கூறினார்.
 இதனிடையே, மோடியின் இந்த செயல்பாட்டை காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில் பத்திரிகையாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
 பாகிஸ்தான் முன்னாள் பிரதமரை ஆரத் தழுவி, அன்பை வெளிக்காட்டிய மோடி, அதேபோன்று ராகுலிடம் ஏன் நடந்து கொள்ளவில்லை? இந்திய குடிமக்களைக் காட்டிலும் நவாஸ் ஷெரீஃப் மீதுதான் மோடிக்கு அதிக அன்பு இருக்கிறதா? என்பதை நாட்டு மக்கள் அறிந்து கொள்ள விரும்புகிறார்கள்.
 ராகுலின் ஒற்றை அரவணைப்பு, பிரதமரின் வெறுப்புணர்வையும், வன்மத்தையும் வெளிக்காட்டிவிட்டது என்றார் அவர்.
 கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் இருந்தபோது நட்புரீதியாக அந்நாட்டுக்கு திடீர் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அவரது இல்ல சுப நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது இரு தலைவர்களும் ஆரத்தழுவியும், கைகளை கோத்தும் நட்பை வெளிப்படுத்தினர். இதுதொடர்பாக வெளியிடப்பட்ட புகைப்படங்கள் அப்போது பரபரப்பாக பேசப்பட்டன.
 இந்நிலையில், வெளிநாடுகளில் சட்டவிரோதமாக சொத்துகள் வாங்கிய விவகாரத்தில் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நவாஸ் ஷெரீஃபையும், அந்த வழக்கில் தொடர்புடைய அவரது மகள் மரியத்தையும் பாகிஸ்தான் போலீஸார் அண்மையில் கைது செய்தனர்.
 இத்தகைய சூழலில்தான், அந்த சம்பவத்தை முன்னிறுத்தி பிரதமர் மோடியை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com