பாஜக கூட்டணியில் இருந்து நிதீஷ் விலக வேண்டும்: ஆம் ஆத்மி

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து நிதீஷ் குமார் சிந்திக்க வேண்டும் என்று

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து நிதீஷ் குமார் சிந்திக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. எதிர்வரும் 2019 மக்களவைத் தேர்தலில் அதிக தொகுதிகள் கேட்டு பாஜகவிடம் நிதீஷ் யாசித்து வருவதாகவும் அக்கட்சி விமர்சித்துள்ளது.
 இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் பிகார் பொறுப்பாளர் சஞ்சய் சிங், மாநிலத் தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
 கடந்த 2015-ஆம் ஆண்டு பிகாரில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய மகா கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதீஷ் குமார் மாநிலத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
 ஆனால், கடந்த ஆண்டு ஜூலை மாதம், அவர் அக்கூட்டணியில் இருந்து விலகி பாஜகவுடன் கைகோத்தார்.
 தம்மை முதல்வராக்கிய மகா கூட்டணிக்கு துரோகம் இழைத்து விட்டு பாஜக தயவில் அப்பதவியில் நீடித்து வரும் நீதிஷ் குமார், அதற்கான விளைவுகளை தற்போது அனுபவித்து வருகிறார். மக்களவைத் தேர்தலில் தங்களுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்குமாறு பாஜகவிடம் அவர் யாசித்து வருகிறார். ஆனால், அதற்கு அக்கட்சி செவிசாய்க்கவில்லை.
 பொதுவாகவே, பாஜகவும், பிரதமர் மோடியும் கூட்டணி கட்சிகளுக்கு மதிப்பளிப்பதில்லை. ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டால்கூட ஒட்டுமொத்த கவனக் குவிப்பும் தம் மீது மட்டுமே இருக்க வேண்டும் என்று பிரதமர் நினைப்பார்.
 கூட்டணி கட்சித் தலைவர்களான நிதீஷ் குமாருடனோ, அல்லது ராம்விலாஸ் பாஸ்வானுடனோ இருக்கையைக் கூட பகிர்ந்து கொள்ளமாட்டார்.
 அத்தகைய பண்புகளைக் கொண்ட தலைவரின் கூட்டணியில் நீடிக்க வேண்டுமா என்பதை நிதீஷ் குமார் மறுபரிசீலனை செய்வது அவசியம்.
 பிகாருக்கு சிறப்பு நிதித் தொகுப்பு அளிப்பதாக அறிவித்த பிரதமர், மாநில மக்கள் அனைவரையும் மூடர்களாக்கி வருகிறார். மாநிலத்துக்கு நடுவே செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளைக் கூட சிறப்பு நிதித் தொகுப்பின் கீழ் அமைக்கப்பட்ட பிரத்யேகத் திட்டம் என மத்திய அரசு வரையறுத்துள்ளது. இது மக்களை ஏமாற்றும் செயல்.
 பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாக பிகாரில் பாஜக தலைவர்கள் சிலர் முறைகேடாக வீட்டு மனை விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது என்றார் சஞ்சய் சிங்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com