யோகாவைப் போல ஆயுர்வேதத்தையும் பிரபலப்படுத்த வேண்டும்: மத்திய அமைச்சர் ஸ்ரீபத் நாயக்

யோக கலையைப் போன்று ஆயுர்வேத சிகிச்சை முறையை சர்வதேச அளவில் பிரபலப்படுத்த வேண்டும் என்பதே தமது விருப்பம் என்று மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் தெரிவித்தார்.

யோக கலையைப் போன்று ஆயுர்வேத சிகிச்சை முறையை சர்வதேச அளவில் பிரபலப்படுத்த வேண்டும் என்பதே தமது விருப்பம் என்று மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் தெரிவித்தார்.
 முதல்கட்டமாக, ஆயுர்வேத சிகிச்சையின் பலன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார்.
 "பழங்கால அறிவியல்' என்று வர்ணிக்கப்படும் ஆயுர்வேத சிகிச்சை முறையை தற்கால தொழில்நுட்பங்களுடன் ஒருங்கிணைப்பது தொடர்பாக அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்துடன் தில்லி ஐஐடி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அண்மையில் ஒப்பந்தம் மேற்கொண்டது.
 இந்நிலையில், ஆயுஷ் துறையின் அமைச்சர் ஸ்ரீபத் நாயக், ஆயுர்வேத சிகிச்சை முறையை பிரபலப்படுத்துவது தொடர்பாக கூறியதாவது:
 அறிவியலுடன் ஆயுர்வேத சிகிச்சை முறையை ஒருங்கிணைப்பதன் மூலம், அந்த மருத்துவ முறை தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதுடன், அதன் பலன்களை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியும்.
 யோக கலை என்பது சர்வதேச கலையாக மாறியிருக்கிறது. ஆயுர்வேத சிகிச்சை முறையும் அதேபோல உலகெங்கிலும் பரவ வேண்டும் என்பதே எனது விருப்பம்.
 ஆயுர்வேத சிகிச்சை முறைகளின் பலன்களை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பாரம்பரிய மருத்துவ முறைகளே பாதுகாப்பானவை என்பதை உணர வேண்டும்.
 உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், மூச்சுத்திறன் பிரச்னைகள், நீரிழிவு போன்ற தொற்று அல்லாத நோய்கள் உலகெங்கிலும் உயிர் பலியை ஏற்படுத்துவதாக உள்ளன. இதனால், ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர். இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படுவது அவசியம்.
 இதுபோன்ற பிரச்னைகளை எதிர்கொள்வதற்கான பல்வேறு வழிமுறைகள் ஆயுர்வேதத்தில் உள்ளன. இதன் மூலமாக, பாதிப்புகளை குறிப்பிடத்தக்க வகையில் கட்டுப்படுத்த முடியும். அதனால், வாழ்க்கை தரம் உயரும் என்றார் அவர்.
 ஆயுர்வேதம், யோகா, நேச்சுரோபதி, யுனானி, சித்தா, ஹோமியோபதி ஆகிய பழங்கால அறிவியல் அல்லது சிகிச்சை முறைகளின் எழுத்துச் சுருக்கமே ஆயுஷ் என்பதாகும்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com