ராகுல் காந்தி மீதான நம்பகத்தன்மை குறைந்து வருகிறது: அருண் ஜேட்லி

"மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது பொய்யான தகவல்களைக் கூறியதன் மூலமாக, ராகுல் காந்தி மீதான நம்பகத்தன்மை குறைந்து வருகிறது'
ராகுல் காந்தி மீதான நம்பகத்தன்மை குறைந்து வருகிறது: அருண் ஜேட்லி

"மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது பொய்யான தகவல்களைக் கூறியதன் மூலமாக, ராகுல் காந்தி மீதான நம்பகத்தன்மை குறைந்து வருகிறது' என்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.
 மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதத்தின்போது பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா-பிரான்ஸ் இடையே எவ்வித ரகசிய ஒப்பந்தமும் இல்லை என்று பிரான்ஸ் அதிபர் தம்மிடம் தனிப்பட்ட முறையில் கூறியதாகத் தெரிவித்தார்.
 எனினும், அதுதொடர்பாக விளக்கம் அளித்த பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் தனது அறிக்கையில், "ரஃபேல் கொள்முதல் நடவடிக்கையில் பாதுகாப்பு மற்றும் ரகசியம் காக்க இந்தியா-பிரான்ஸ் இடையே 2008-இல் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அது தற்போதைக்கும் பொருந்தும்' என்று கூறிவிட்டது.
 இந்நிலையில், இதுகுறித்து மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி முகநூலில் "அலட்சியமும், நம்பிக்கையில்லா தீர்மானமும்' என்ற தலைப்பில் சனிக்கிழமை பதிவிட்டதாவது:
 பிரான்ஸ் அதிபர் தன்னுடன் தனிப்பட்ட முறையில் உரையாடியதாக இட்டுக்கட்டி கூறியதன் மூலமாக, ராகுல் காந்தி தன் மீதான நம்பகத்தன்மையை குறைத்துக் கொண்டார். அத்துடன், உலக அரங்கில் இந்திய அரசியல் தலைவர்களின் நன்மதிப்பை மிகப்பெரிய அளவில் குலைத்துவிட்டார்.
 நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின் முக்கியத்துவத்தை ராகுல் காந்தி சிதைத்துவிட்டார். உண்மைகள் எப்போதும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. பிரதமராகும் ஆசையுடன் இருக்கும் ஒருவர், தவறான தகவலை பரப்புபவராகவும், ஒரு விவகாரம் குறித்த அடிப்படை அறிவு அற்றவராகவும் இருக்க இயலாது.
 விவாதத்தை முன்னெடுப்பவர்கள், வழக்கமாக மூத்த அரசியல் தலைவர்களாகத்தான் இருப்பார்கள். அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்பது தீவிரமான விவகாரம். அது, அற்பத்தனமாக நடந்துகொள்வதற்கான ஒரு சூழ்நிலை அல்ல. அவ்வாறு விவாதத்தில் பேசும் ஒரு உறுப்பினர், பிரதமராகும் கனவுடன் தேசியக் கட்சி ஒன்றின் தலைவராக இருக்கும் பட்சத்தில், அவரது ஒவ்வொரு வார்த்தையும் விலைமதிப்பற்றதாக இருக்க வேண்டும். அவரது உண்மையான கருத்துகள், அவர் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்க வேண்டும்.
 ராகுல் காந்தி தனக்கு கிடைத்த ஓர் அருமையான வாய்ப்பை வீணடித்து விட்டார். இதுவே எதிர்வரும் மக்களவைத் தேர்தலுக்கான அவரது சிறந்த பேச்சாக இருக்குமானால், கடவுள் தான் அவரது கட்சியை காப்பாற்ற வேண்டும். ஓர் நாட்டின் அல்லது ஓர் மாநிலத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஒரு நபரை தவறாக மேற்கோள் காட்டக் கூடாது. அவ்வாறு செய்தால், அவருடனோ, அவர் முன்பாகவோ பேச எவரும் முன்வர மாட்டார்கள்.
 ரஃபேல் விவகாரத்தில் ரகசிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக ராகுல் காந்தி கூறுகிறார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் அதுபோன்று ரகசிய ஒப்பந்தத்தில் ஈடுபட்டது. தாம் உண்மையை மறுக்கக் கூடியவர் என்பதை ராகுல் மீண்டும் மீண்டும் வெளிக்காட்டுகிறார் என்று அருண் ஜேட்லி அந்தப் பதிவில் கூறியுள்ளார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com