ஆளுநர் ஆட்சியின்கீழ் காஷ்மீரில் பயங்கரவாத சம்பவங்கள் குறைந்துள்ளன: மத்திய உள்துறை அமைச்சகம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட பின்னர் பயங்கரவாத வன்முறைச் சம்பவங்கள் குறைந்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட பின்னர் பயங்கரவாத வன்முறைச் சம்பவங்கள் குறைந்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியில் இருந்த மக்கள் ஜனநாயகக் கட்சி தலைமையிலான அரசுக்கு அளித்த ஆதரவை பாஜக அண்மையில் திரும்பப் பெற்றது. இதையடுத்து, மாநில முதல்வர் பதவியை மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா செய்தார். எனவே, அந்த மாநிலம் ஆளுநர் ஆட்சியின்கீழ் கடந்த ஜூன் மாதம் 20ஆம் தேதி கொண்டு வரப்பட்டது.
 ஆளுநர் ஆட்சி அமலுக்கு வரும் முன்னர், ஜம்மு-காஷ்மீரில் முஸ்லிம்கள் ரமலான் நோன்பை அமைதியாக கடைப்பிடிக்கும் வகையில், பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை பாதுகாப்புப் படை நிறுத்தி வைத்தது.
 ஒரு மாதத்துக்கு இந்த அறிவிப்பு அமலில் இருந்தது. அதன்பின்னர், பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை மீண்டும் தொடங்கப்பட்டது.
 இந்நிலையில், ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்படும் முன்பு, அதாவது ரமலான் மாத காலத்தில் நடைபெற்ற பயங்கரவாத வன்முறைச் சம்பவங்களோடு ஒப்பிடுகையில் கடந்த ஒரு மாதகாலத்தில் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத வன்முறைச் சம்பவங்கள் குறைந்து விட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
 இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருக்கும் புள்ளி விவரங்கள் தெரிவிப்பதாவது:
 கடந்த ஒரு மாதகாலத்தில், ஜம்மு-காஷ்மீரில் 47 பயங்கரவாத வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அதேநேரத்தில், முந்தைய மாதத்தில் 80 சம்பவங்கள் நடைபெற்றன.
 இதில் பாதி சம்பவங்கள், கையெறி குண்டு தாக்குதல் சம்பவங்களும், துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் ஆகும்.
 ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தபின்னர் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், பயங்கரவாதிகள் 14 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சண்டையில் 5 பாதுகாப்புப் படையினர் வீரமரணம் அடைந்துள்ளனர். அதேநேரத்தில், ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்படுவதற்கு முந்தைய மாதத்தில் 24 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 10 பாதுகாப்புப் படையினர் சண்டையில் உயிரிழந்தனர்.
 ஆளுநர் ஆட்சியின்கீழ் போராட்டக்காரர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் வெகுவாக அதிகரித்துள்ளன.
 அதாவது, ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்படுவதற்கு முந்தைய மாதத்தில் 90 சம்பவங்கள் நடந்தன. ஆனால் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தபிறகு, இந்த எண்ணிக்கை 95ஆவது உயர்ந்துள்ளது.
 ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்படுவதற்கு முன்பு, பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கையில் அப்பாவி மக்கள் 4 பேர் பலியாகினர்.
 ஆனால், ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தபின்னர் கடந்த ஒரு மாதத்தில் 7 பொது மக்கள் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருக்கும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com