மராத்தா சமூகத்தினர் எச்சரிக்கை: பயணத் திட்டத்தை ரத்து செய்தார் ஃபட்னவீஸ்

மராத்தா சமூகத்தினரின் போராட்ட அறிவிப்பை அடுத்து, மகாராஷ்டிர மாநிலம், சோலாப்பூர் மாவட்டத்தில் பந்தர்பூர் நகரில் உள்ள கோயிலுக்கு செல்லும் திட்டத்தை அந்த மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் ரத்து செய்தார்
மராத்தா சமூகத்தினர் எச்சரிக்கை: பயணத் திட்டத்தை ரத்து செய்தார் ஃபட்னவீஸ்

மராத்தா சமூகத்தினரின் போராட்ட அறிவிப்பை அடுத்து, மகாராஷ்டிர மாநிலம், சோலாப்பூர் மாவட்டத்தில் பந்தர்பூர் நகரில் உள்ள கோயிலுக்கு செல்லும் திட்டத்தை அந்த மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் ரத்து செய்தார்.
 புகழ்பெற்ற வைணவத் திருத்தலங்களில் ஒன்றான விட்டல், ருக்மணி திருக்கோயில் பந்தர்பூரில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஃபட்னவீஸ் வழிபடுவது வழக்கமாக இருந்து வந்தது.
 மகா ஏகாதசி (ஜூலை 23) தினத்தில் அவர் வழிபாடு செய்வதாக இருந்தது. இந்நிலையில், அரசு வேலை மற்றும் கல்வியில் இடஒதுக்கீடு கோரி போராடிவரும் எங்களது கோரிக்கையை நிறைவேற்றாமல் ஃபட்னவீஸ் பந்தர்பூர் வந்தால் அவருக்கு இடையூறு ஏற்படுத்துவோம் என்று மராத்தா சமூகத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 இந்தச் சூழ்நிலையில் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
 பந்தர்பூரில் திங்கள்கிழமை நடைபெறும் சிறப்பு வழிபாட்டில் ஃபட்னவீஸ் பங்கெடுக்க மாட்டார் என்று அந்த மாநில அமைச்சர் கிரிஷ் மகாஜன் தெரிவித்தார்.
 இதுகுறித்து மும்பையில் ஃபட்னவீஸ் கூறியதாவது:
 பந்தர்பூரில் எனக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், பக்தர்களுக்கு மத்தியில் பாம்புகளை விட்டு, கூட்டத்தில் நெரிசலை ஏற்படுத்த சிலர் திட்டமிட்டு வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இது துரதிருஷ்டவசமானதாகும். வளர்ந்துவரும் மாநிலமான மகாராஷ்டிரத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழக் கூடாது. கோயிலில் நடக்கும் பூஜைகள் அரசியலுக்கு அப்பாற்பட்டவை. என்னால் முழு பாதுகாப்புடன் கோயிலுக்குச் சென்று திரும்ப முடியும். ஆனால், பக்தர்கள் நலனைக் கருத்தில் கொண்டு கோயிலுக்குச் செல்லும் திட்டத்தை ரத்து செய்தேன். மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் விவகாரத்தில் நீதிமன்றம்தான் முடிவெடுக்க வேண்டும் என்றார் ஃபட்னவீஸ்.
 மராத்தா சமூகத்தினர் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி நீண்ட காலமாக பல்வேறு வடிவங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 கடந்த ஆண்டு மும்பையில் மிகப் பெரிய பேரணியை மராத்தா சமூகத்தினர் முன்னெடுத்தனர். மகா ஏகாதேசியையொட்டி, சுமார் 10 லட்சம் பேர் பந்தர்பூருக்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com