சபரிமலையில் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை: கேரள உயர் நீதிமன்றம்

சபரிமலையில் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டுக்கு கேரள உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சபரிமலையில் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை: கேரள உயர் நீதிமன்றம்

சபரிமலையில் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டுக்கு கேரள உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, சபரிமலை ஐயப்பன் கோயில் பகுதியில் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்கள், தண்ணீர் பாக்கெட்டுகள் உள்ளிட்டவற்றுக்கு கேரள உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. 
இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயில் அமைந்துள்ள பகுதியில் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கு அதிக அளவில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தப்படுவதே காரணம் என்றும் தகவல்கள் வெளியாகின.
இதை அடிப்படையாகக் கொண்டு, கேரள உயர் நீதிமன்றம் வழக்கு விசாரணையை மேற்கொண்டது. இந்த வழக்கில், கேரள உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர். ராமச்சந்திர மேனன், தேவன் ராமச்சந்திரன் ஆகியோரைக் கொண்ட டிவிஷன் பெஞ்ச் தனது உத்தரவை திங்கள்கிழமை வெளியிட்டது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
சபரிமலை ஐயப்பன் கோயில் தலைமை பூசாரியால் தெரிவிக்கப்பட்டுள்ள மக்கும் தன்மைகொண்ட பொருள்களை மட்டுமே, கோயிலுக்கு இருமுடி கட்டிக் கொண்டு வரும் பக்தர்கள் கொண்டு வர வேண்டும். பிளாஸ்டிக் பொருள்கள் எதையும் கொண்டு வரக் கூடாது. கோயில் மற்றும் கோயில் வளாகங்கள் ஆகியவற்றில் பிளாஸ்டிக் தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு குறித்த தகவலை, வெளிமாநிலங்களில் இருந்து சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு தெரியப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் நவம்பர் மாதம் மத்தியில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவ்வாறு பக்தர்கள் வரும்போது தாங்கள் கொண்டு வரும் தண்ணீர் பாட்டில்கள், துணிகள் உள்ளிட்டவற்றை வீசி செல்வதாகவும், இதனால் சபரிமலையின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com