வறுமையினால் ஒரு வாரமாக உணவு, நீர் இன்றி உயிரிழந்த மூன்று பிஞ்சுகள்: தலைநகரில் நிகழ்ந்த தலைகுனிவு 

கிழக்கு தில்லியில் உள்ள  மண்டாவாளி பகுதியில் வறுமையின் காரணமாக ஒரு வாரமாக உணவு, நீர் இன்றி மூன்று பெண் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. 
வறுமையினால் ஒரு வாரமாக உணவு, நீர் இன்றி உயிரிழந்த மூன்று பிஞ்சுகள்: தலைநகரில் நிகழ்ந்த தலைகுனிவு 

புது தில்லி: கிழக்கு தில்லியில் உள்ள  மண்டாவாளி பகுதியில் வறுமையின் காரணமாக ஒரு வாரமாக உணவு, நீர் இன்றி மூன்று பெண் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. 

தலைநகர் தில்லியில் உள்ள குடிசைப் பகுதி ஒன்றினைச் சேர்ந்தவர் மங்கள். ரிக்ஷா ஓட்டி பிழைப்பு நடத்தி வந்த இவரது மனைவி பீனா. இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு மன நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  இவர்களுக்கு மானசி(8), பாரோ(4), சுகோ(2) என மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.

இவர் வசித்து வந்த வீட்டுக்கு வாடகை கொடுக்க முடியாத காரணத்தால் வீட்டு உரிமையாளர் வீட்டை காலி செய்யுமாறு கூறியுள்ளார். இதன் காரணமாக கிழக்கு தில்லியில் உள்ள மண்டாவாளி பகுதிக்கு மங்கள்  குடிபெயர்ந்துள்ளார். அவருக்கு மேலும் சோதனை தருவது போல இவரது ரிக்ஷாவை யாரோ திருடிச் சென்றுள்ளனர்.

இதனால் இருந்த ஒரே வேலை வாய்ப்பையும் இழந்த மங்கள் செய்வதறியாது திகைத்தார். பின்னர் வேறு வேலை தேடிச் சென்றார். ஆனால் இரண்டு வாரங்களாகியும் மங்கள் திரும்பி வராததால் குழந்தைகள் பராமரிக்க ஆளின்றி மிகுந்த சிரமப்பட்டனர். மன நலம் பாதிக்கப்பட்ட தாய் பீனாவாலும் குழந்தைகளை சரிவர கவனிக்க இயலவில்லை.

இந்நிலையில் புதனன்று மதியம் ஒரு மணி அளவில் மூன்று குழந்தைகளும் வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர். இதைக் கண்டு அதிர்ந்த அக்கம் பக்கத்தார் குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்ததில் மூவருமே இறந்து போனது தெரியவந்தது. பிரேத பரிசோதனை செய்ததில், அந்த குழந்தைகளுக்கு எந்த நோயும் இல்லை, உடலில் காயங்களும் இல்லை, என்பது தெரிய வந்தது. ஆனால் அவர்கள் முவரும் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தண்ணீர், உணவு என எதையும் சாப்பிடவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் தெரியவந்தது.

இதிலிருந்து அந்த பிஞ்சுக் குழந்தைகள் மூவரும் பட்டினியால்தான் மரணமடைந்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. நாட்டின் தலைநகரான தில்லியில் பட்டினியால் மூன்று குழந்தைகள் இறந்திருப்பது, அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com