டிராய் தலைவரின் தனிப்பட்ட விவரங்கள் டுவிட்டரில் வெளியீடு: சவால் எதிரொலி

"டுவிட்டர்' எனப்படும் சுட்டுரையில் ஆதார் எண்ணை டிராய் தலைவர் ஆர்.எஸ்.சர்மா பகிரங்கமாக வெளியிட்டு சவால் விடுத்திருந்த நிலையில், அவரது செல்லிடப்பேசி எண்,
டிராய் தலைவரின் தனிப்பட்ட விவரங்கள் டுவிட்டரில் வெளியீடு: சவால் எதிரொலி

"டுவிட்டர்' எனப்படும் சுட்டுரையில் ஆதார் எண்ணை டிராய் தலைவர் ஆர்.எஸ்.சர்மா பகிரங்கமாக வெளியிட்டு சவால் விடுத்திருந்த நிலையில், அவரது செல்லிடப்பேசி எண், புகைப்படம், வசிப்பிட முகவரி, பிறந்த தேதி உள்ளிட்ட பல்வேறு விவரங்களை பயனாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
 ஆனாலும், சவால் முடிந்துவிடவில்லை என சர்மா கூறியுள்ளார். டிராய் தலைவராக பார்க்காமல், சாதாரண குடிமகனாக கருதி தமது சவால் எதிர்கொள்ளப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
 மேலும், பயனாளர்கள் வெளியிட்ட விவரங்களால் தனிப்பட்ட முறையில் தமக்கு என்ன ஆபத்து நேர்ந்துள்ளது? என்றும் சர்மா கேள்வி எழுப்பியுள்ளார்.
 ஆதார் அட்டையின் நம்பகத்தன்மை குறித்து தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினரால் சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது. அதே சமயம், ஆதார் மூலமாக பொதுமக்களின் தனிப்பட்ட விவரங்கள் கசிவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
 இந்நிலையில், இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் முன்னாள் பொது இயக்குநரும், தற்போதைய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) தலைவருமான ஆர்.எஸ்.சர்மா, சுட்டுரையில் கடந்த சனிக்கிழமை தமது ஆதார் எண்ணை பதிவிட்டு பகிரங்க சவால் விடுத்தார்.
 அவரது பதிவை ஆயிரக்கணக்கானோர் பகிர்ந்ததுடன் விருப்பமும் தெரிவித்தனர். அதே சமயம், சர்மாவின் சவாலை முறியடிக்கும் வகையில் அவரது தனிப்பட்ட விவரங்களை பல்வேறு பயனாளர்கள் சுட்டுரையில் வெளியிட்டனர்.
 குறிப்பாக, சர்மாவின் செல்லிடப்பேசி எண், கட்செவி அஞ்சலின் (வாட்ஸ்-அப்) முகப்பு படம், பிறந்த தேதி, பான் எண் உள்ளிட்ட விவரங்கள் வெளிடப்பட்டன. சிலர் சர்மாவின் குறுஞ்செய்தி பரிமாற்ற விவரங்களைக் கூட வெளியிட முடியும் என்றும், சமூக வலைதளங்களில் இதுபோன்ற சவாலை விடுக்க வேண்டாம் என்றும் எச்சரித்தனர்.
 வலைதளங்களை முடக்குவதில் வல்லவர் என பெயர் பெற்ற பிரான்ஸ் நாட்டைச் சார்ந்தவரான எல்லியோட் ஆல்டெர்சன், "உங்களது முகவரியை வலைதள பயனாளர்கள் கண்டறிந்துள்ளனர். உங்களது பிறந்த தேதி, செல்லிடப்பேசி மாற்று எண் போன்றவற்றையும்கூட தெரிவித்து விட்டார்கள். நான் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். ஆதார் எண்ணை பொதுவெளியில் வெளியிடுவது நல்லதல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்'' என்று பதிவிட்டார். மேலும், சர்மாவின் ஆதார் எண்களோடு எந்தவித வங்கிக் கணக்கும் இணைக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.
 சர்மா பதிலடி: ஆல்டெர்சன் மட்டுமன்றி, வேறு சிலரின் பதிவுகளுக்கும் டிராய் தலைவர் சர்மா பதிலடி கொடுத்துள்ளார்.
 "ஆல்டெர்சன், உங்களது வாதத்தில் உண்மையில்லை. என்னுடைய அனைத்து வங்கிக் கணக்குகளும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதே சமயம், என்னுடைய வங்கிக் கணக்கு எண் உங்களுக்கு தெரியும் என்றே வைத்துக் கொள்வோம். அதனால் என்ன ஆகிவிடப் போகிறது?'' என்று சர்மா கேள்வி எழுப்பியுள்ளார்.
 பயனாளர் ஒருவர் வெளியிட்டது தமது பழைய முகவரி என்று கூறிய அவர், தமது புதிய முகவரி வேண்டுமா? என்று கேள்வி எழுப்பினார்.
 ஆதார் மூலம் ஒருவருடைய தனிமனித பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்க முடியாது என அவர் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளார்.
 சுட்டுரையில் அவர், "செல்லிடப்பேசி எண் மற்றும் இதர விவரங்களை வெளியிடுமாறு நான் சவால் விடுக்கவில்லை. எனக்கு தனிப்பட்ட முறையில் பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்றுதான் சவால் விடுத்திருந்தேன்.
 இதுவரையில் அதில் யாரும் வெற்றியடையவில்லை. அவர்கள் வெற்றியடைய வாழ்த்துக்கள்'' என்று பதிவிட்டுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com