பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளி கைது 

கர்நாடகாவைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான பரசுராம் பெங்களூருவில் செவ்வாயன்று கைது செய்யப்பட்டார்
பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளி கைது 

பெங்களூரு: கர்நாடகாவைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான பரசுராம் பெங்களூருவில் செவ்வாயன்று கைது செய்யப்பட்டார்

கர்நாடகாவைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளரும், ஹிந்துத்துவா கொள்கை எதிர்ப்பாளருமான கெளரி லங்கேஷ் (55), பெங்களூரில் உள்ள அவரது வீட்டின் முன் 2017, செப்.5-ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச் சம்பவம் தொடர்பான விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுப்படை அமைக்கப்பட்டது. 

இந்த வழக்கின் குற்றவாளிகளில் ஒருவராக ஹிந்துத்துவா செயல்பாட்டாளரும், சட்ட விரோதமாக துப்பாக்கி விற்பனையில் ஈடுபட்டவருமான டி.நவீன்குமாரின் பெயர் குறிப்பிடப்பட்டது.  மண்டியா மாவட்டத்தின் மத்தூர் நகரைச் சேர்ந்த நவீன்குமார், துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் பெங்களூரில் உள்ள கெம்பே கெளடா பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது கடந்த பிப்ரவரி18-ஆம் தேதி சிறப்பு புலனாய்வுப் படையினரால் கைது செய்யப்பட்டார். 

இந்திய தண்டனைச்சட்டப் பிரிவுகள் 302 (கொலை), 120பி (குற்றச்சதி), 118 (சதியை மூடிமறைத்தல்), 114(குற்றத்துக்கு உடந்தையாக இருத்தல்) மற்றும் ஆயுதச் சட்டத்தின்கீழ் நவீன்குமார் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறார். . 

இவருடன் லங்கேஷ் கொலைக்குக் காரணமான மனோகர் எட்வே(30), சுஜித் குமார் (எ) பிரவீண்(37), அமோக் காலே (எ)பாய்சாப் (40), அமித் தெக்வேகர் (எ) பிரதீப் ஆகிய 4 பேரையும் போலீஸார் கைது செய்துள்ளதாக சிறப்புப் புலனாய்வுப் படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கு தொடர்பான மேலும் பல ஆதாரங்களை வெகுவிரைவில் தாக்கல் செய்யவிருப்பதாக நீதிமன்றத்தில் விசாரணைஅமைப்பான சிஐடி தெரிவித்துள்ளது

இந்நிலையில் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான பரசுராம் பெங்களூருவில் செவ்வாயன்று கைது செய்யப்பட்டார்.

சம்பவம் நடந்த இடத்தில் இருந்து கிடைத்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பெங்களூருவில் சிறப்பு புலனாய்வுக் குழுவினர், பரசுராமைக் கைது செய்துள்ளனர்.

அவரிடம் ரகசிய இடத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com