சட்டப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு: கலந்தாய்வில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு

தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான முதல் கட்ட கலந்தாய்வில் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்து விட்டது.

தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான முதல் கட்ட கலந்தாய்வில் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்து விட்டது.
நாட்டில் உள்ள 19 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான பொது நுழைவுத் தேர்வு கடந்த மே 13-ஆம் தேதி நடைபெற்றது. 
இந்தத் தேர்வினை, சிஃபி டெக்னாலஜிஸ் என்ற தனியார் நிறுவனத்தின் உதவியுடன் சட்டப் படிப்புக்கான தேசியப் பல்கலைக்கழகம் ஆன்லைன் முறையில் நடத்தியது.
தேசிய சட்டக் கல்லூரிகளில் சட்டப் படிப்பு, சட்ட மேற்படிப்புக்கான முக்கியத்துவம் வாய்ந்த இந்த நுழைவுத் தேர்வினை ஆன்லைனில் எழுதும்போது, பல்வேறு தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டதாக மாணவர் தரப்பில் இருந்து குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக 6 உயர் நீதிமன்றங்களிலும், உச்ச நீதிமன்றத்திலும் மாணவர்கள் தரப்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. 
இதில், நுழைவுத் தேர்வை ரத்து செய்துவிட்டு மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என்று கோரப்பட்டது. 258 மையங்களில் 54,450 பேர் நுழைவுத் தேர்வை எழுதினர். இவர்களில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வின்போது தாங்கள் தொழில்நுட்பப் பிரச்னையை எதிர்கொண்டதாக புகார் தெரிவித்தனர்.
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்த உச்ச நீதிமன்ற விடுமுறைக் கால அமர்வு, மாணவர்களின் கோரிக்கையை நிராகரித்தது. 
திட்டமிட்டபடி தேர்வு முடிவுகளை வெளியிடலாம் என்று நீதிமன்றம் கடந்த மாத இறுதியில் அனுமதி அளித்தது. இந்நிலையில், இந்த மனு உச்ச நீதிமன்ற விடுமுறை கால அமர்வு முன்பு கடந்த திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வேண்டுமானால் அளிக்கலாம். ஆனால், மறுநுழைவு தேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. 
தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான முதல் கட்ட கலந்தாய்வை தடுத்து நிறுத்துவதற்கு நீதிபதிகள் மறுப்பு தெரிவித்து விட்டனர். அதைத் தொடர்ந்து, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கொச்சியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகம் வரும் 15-ஆம் தேதி தேதிக்குள் கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com