ஜெயநகரில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி

கர்நாடகத்தில் ஜெயநகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் செளம்யா 2,887 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
ஜெயநகரில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி

கர்நாடகத்தில் ஜெயநகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் செளம்யா 2,887 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கர்நாடகத்தில் 224 தொகுதிகளுக்கு மே 12-ஆம் தேதி தேர்தல் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பெங்களூரில் உள்ள ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் விஜயகுமார் மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, அத் தொகுதிக்கான தேர்தல் ஜூன் 11-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
இத் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் ராமலிங்க ரெட்டியின் மகள் செளம்யா போட்டியிட்டார். பாஜக சார்பில் மறைந்த முன்னாள் எம்எல்ஏ பி.என்.விஜயகுமாரின் சகோதரர் பி.என்.பிரஹலாத் களமிறக்கப்பட்டார். மஜத சார்பில் போட்டியிட்ட காளே கெளடாவை காங்கிரஸ் வேட்பாளர் செளம்யாவுக்கு ஆதரவளிக்கும் வகையில் அக் கட்சி திரும்பப் பெற்றது.
இத் தொகுதியில் மொத்தம் 2,03,184 வாக்காளர்கள் உள்ளனர். ஜூன் 11-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் 1,11,584 வாக்குகள் (அதாவது 54.91 சதவீதம்) பதிவாகியிருந்தன. வாக்கு எண்ணிக்கை புதன்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. 
வாக்கு எண்ணிக்கை: முதல் சுற்றில் 427 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.செளம்யா முன்னிலை வகித்தார். ஒரு கட்டத்தில் 9-ஆவது சுற்றின் போது பாஜக வேட்பாளர் பிரஹலாத்தைவிட செளம்யா 15,345 வாக்குகள் முன்னணியில் இருந்தார்.
16-ஆவது சுற்றின் இறுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.செளம்யாவுக்கு 54,458 வாக்குகள் கிடைத்தன. பாஜக வேட்பாளர் பிரஹலாத் 51,571 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் இருந்தார். பாஜக வேட்பாளரைக் காட்டிலும் 2,887 வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.செளம்யா வெற்றி பெற்றார்.
பாஜகவிடமிருந்து பறித்தது: இதன்மூலம், 10 ஆண்டுகளுக்குப் பிறகு இத் தொகுதியை பாஜகவிடம் இருந்து காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. களத்தில் இருந்த 19 வேட்பாளர்களில் காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர் ரவி கிருஷ்ணரெட்டி(1861 வாக்குகள்) தவிர, எஞ்சியுள்ள 16 வேட்பாளர்களில் ஒருவர் கூட ஆயிரம் வாக்குகள்கூட பெறமுடியவில்லை. ஆனால், நோட்டாவுக்கு 848 வாக்குகள் கிடைத்ததால், அதற்கு நான்காம் இடம் கிடைத்தது.
பேரவை பலம்: ஜெயநகர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள நிலையில் சட்டப்பேரவையில் காங்கிரஸின் பலம் 79-இல் இருந்து 80-ஆக உயர்ந்துள்ளது என்றாலும், ஜம்கண்டி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ சித்து நியாம கெளடா சில நாள்களுக்கு முன்பு சாலை விபத்தில் பலியானதால், காங்கிரஸின் பலம் 79-ஆக உள்ளது. வெகுவிரைவில் ஜம்கண்டி தொகுதிக்கு தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com