ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளை சொந்தம் கொண்டாட இந்தியாவுக்கு சட்ட ரீதியில் உரிமை கிடையாது: பாகிஸ்தான்

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருக்கும் பகுதிகளை சொந்தம் கொண்டாட இந்தியாவுக்கு சட்ட ரீதியில் உரிமை கிடையாது என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருக்கும் பகுதிகளை சொந்தம் கொண்டாட இந்தியாவுக்கு சட்ட ரீதியில் உரிமை கிடையாது என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள காஷ்மீர் பகுதியின் இடைக்கால அரசியலமைப்புச் சட்டத்தில் அண்மையில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதில், ஆக்கிரமிப்பு காஷ்மீர் நிர்வாக கவுன்சில்கள், அதன் நிதித் தொடர்பான அதிகாரங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு, பாகிஸ்தானிடம் இந்தியா தனது கடுமையான எதிர்ப்பை கடந்த வாரம் பதிவு செய்திருந்தது.
இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், இந்தியா தெரிவித்திருந்த எதிர்ப்பு வெளிப்படையாக நிராகரிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது:
காஷ்மீர் பகுதிகளை சொந்தம் கொண்டாடுவதற்கு, இந்தியாவுக்கு சட்ட ரீதியில் உரிமை கிடையாது. கடந்த 70 ஆண்டுகளாக களத்தில் நிலவும் உண்மை நிலவரத்துக்கு எதிராக இந்தியா தொடர்ந்து பேசி வருகிறது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஒட்டுமொத்த பகுதிகளும், சர்ச்சைக்குரிய பகுதியாகும். இதை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் உறுதி செய்துள்ளது.
அந்த தீர்மானங்களில், ஜம்மு-காஷ்மீர் பிரச்னைக்கு ஐ.நா. மேற்பார்வையின்கீழ் வெளிப்படையாகவும், நியாயமாகவும் மக்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தி ஜனநாயக ரீதியில் இறுதி தீர்வு காணப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களில், காஷ்மீர் மக்களுக்கு சுய நிர்ணய உரிமை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானங்களை இந்தியா, பாகிஸ்தான், சர்வதேச சமூகம் ஆகியவையும் ஏற்றுக் கொண்டன.
எனவே, காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அற்பத்தனமான எதிர்ப்புகளையும், அடிப்படையற்ற, தேவையில்லாத அறிவிப்புகளையும் வெளியிடுவதை இந்தியா கைவிட வேண்டும். அதற்குப் பதிலாக, சர்வதேச சமூகத்துக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களின்படி, ஜம்மு-காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காணவும் இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com