6 பாஸ்போர்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் வாங்கி விட்டு வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுள்ள பிரபல தொழிலதிபர் நீரவ் மோடி, 6 பாஸ்போர்ட்டுகளைப் பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
6 பாஸ்போர்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் வாங்கி விட்டு வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுள்ள பிரபல தொழிலதிபர் நீரவ் மோடி, 6 பாஸ்போர்ட்டுகளைப் பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக, அவர் மீது புதிய வழக்குப் பதிவு செய்யப்படவுள்ளது.
வைர விற்பனைத் தொழிலில் ஈடுபட்டு வந்த நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் வாங்கி விட்டு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்று விட்டார். அவர் பிரிட்டனில் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. 
அவர் வெளிநாடு தப்பிச் சென்ற பிறகே, அவரது கங்கிக் கடன் மோசடி தெரியவந்துள்ளது. அதன் பிறகு அவர் மீதும், அவரது உறவினர் மெஹுல் சோக்ஸி மீதும் சிபிஐயும், அமலாக்கத் துறையும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. 
இந்நிலையில், நீரவ் மோடி பல பாஸ்போர்ட் வைத்திருந்த தகவல் அம்பலமாகியுள்ளது. இதுகுறித்து மத்திய அரசின் உயரதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் நீரவ் மோடி, பெல்ஜியத்துக்கு அடிக்கடி பயணம் மேற்கொண்டதாக இந்திய உளவுத் துறைக்குத் தகவல் கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக, உளவுத் துறை விசாரணை நடத்தியதில், நீரவ் மோடி 6 பாஸ்போர்ட்டுகள் வைத்திருப்பது தெரியவந்தது. அவற்றில், 4 பாஸ்போர்ட்டுகளை அவர் நீண்ட நாள்களாகப் பயன்படுத்தவில்லை.
எஞ்சிய 2 பாஸ்போர்ட்டுகளில் ஒன்றில் அவரது முழுப் பெயரும், மற்றொன்றில் அவரது முதல் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதில், முதலாவது பாஸ்போர்ட்டை இந்திய அரசு ஏற்கெனவே முடக்கி விட்டது. அவர் இரண்டாவது பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி வந்தது தெரிந்தவுடன், அதையும் இந்திய அரசு முடக்கி விட்டது. 
நீரவ் மோடியின் பாஸ்போர்ட்டுகள் முடக்கப்பட்டதை வெளியுறவுத் துறை அமைச்சகம் மூலமாக இண்டர்போல் சர்வதேச காவல் துறையிடம் மத்திய அரசு தெரிவித்துவிட்டது. எனினும், ஆவணங்களை முடக்குவதில், பல்வேறு நாடுகளுக்கு இடையே ஒரே மாதிரியான சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படாததால், வெளிநாடுகளில் அவரது பாஸ்போர்ட்டை முடக்குவதில் சிக்கல் நீடிக்கிறது. இதைப் பயன்படுத்தி, நீரவ் மோடி பல நாடுகளுக்குச் சென்று வருவதாகத் தெரிகிறது.
ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பாஸ்போர்ட்டை வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகும். அரசுத் துறையில் உயர் பொறுப்பில் இருப்பவர்கள், தூதரக அளவில் பணியாற்றுபவர்கள் 
உள்பட சிறப்புப் பணிகளில் இருப்பவர்கள் மட்டுமே ஒன்றுக்கும் மேற்பட்ட பாஸ்போர்ட்டுகளை பயன்படுத்தலாம். எனவே, பல பாஸ்போட்டுகளைப் பயன்படுத்தியதாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு பதிவு செய்யப்படவுள்ளது என்று அந்த அதிகாரி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com