கேஜரிவால் 7-ஆவது நாளாக உள்ளிருப்புப் போராட்டம் 

துணைநிலை ஆளுநர் மாளிகையில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, அமைச்சர்கள் சத்யேந்தர் ஜெயின், கோபால் ராய் ஆகியோர் மேற்கொண்டுள்ள உள்ளிருப்புப் போராட்டம் ஏழாவது நாளாக
கேஜரிவால் 7-ஆவது நாளாக உள்ளிருப்புப் போராட்டம் 

துணைநிலை ஆளுநர் மாளிகையில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, அமைச்சர்கள் சத்யேந்தர் ஜெயின், கோபால் ராய் ஆகியோர் மேற்கொண்டுள்ள உள்ளிருப்புப் போராட்டம் ஏழாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்தது.
தில்லி அரசில் பணியாற்றும் உயரதிகாரிகள் கடந்த 4 மாதங்களாகப் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், இது தொடர்பாக அதிகாரிகளுக்கு துணை நிலை ஆளுநர் அனில் பய்ஜால் உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தியும், கேஜரிவால் மற்றும் மூன்று அமைச்சர்கள் திங்கள்கிழமை மாலை முதல் துணைநிலை ஆளுநர் மாளிகையில் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
இதேபோல, தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் செவ்வாய்க்கிழமையும், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா புதன்கிழமையும் தொடங்கிய காலவரையற்ற உண்ணாவிரதம் ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்தது. இவர்கள் நலமாக உள்ளதாகவும், ஆனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்து காணப்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
தில்லியில் உள்ள பல குடியிருப்பு நலச் சங்கங்கள் கேஜரிவாலின் போ ராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளன. மேலும், கேஜரிவாலுக்கு சிவசேனை கட்சி ஆதரவு தெரிவித்துள்ளதாக ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது. 
சுப்பிரமணியன் சுவாமி சாடல்: இதனிடையே, கேஜரிவால் மீது சுப்ரமணியன் சுவாமி கடுமையாகச் சாடியுள்ளார். இதுதொடர்பாக தில்லியில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஒரு மாவோயிஸ்ட்; ஏமாற்றுக்காரர். பிறகு ஏன் மம்தா பானர்ஜி, பினராயி விஜயன், குமாரசாமி, சந்திரபாபு நாயுடு ஆகியோர் அவருக்கு ஆதரவளிக்கின்றனர்' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மறுப்பு: பிரதமர் மோடி தலைமையில் தில்லியில் நடைபெற்ற நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் கேஜரிவால் சார்பில் துணைநிலை ஆளுநர் அனில் பஜ்யால் கலந்து கொண்டதாக சுட்டுரையில் ஒருவர் பதிவிட்டிருந்தார். இதையடுத்து, கேஜரிவால் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், 'இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவின் கீழ் தில்லி முதல்வரை, துணைநிலை ஆளுநர் பிரதிநிதித்துவப்படுத்தலாம்? என் சார்பில் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு துணைநிலை ஆளுநரை நான் கேட்கவில்லை' எனக் குறிப்பிட்டார். 
ஆனால், நீதி ஆயோக் கூட்டத்தில் தில்லி துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் கலந்து கொள்ளவில்லை என அதன் தலைவர் அமிதாப் காந் மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், 'இது முற்றிலும் தவறான தகவலாகும். நீதி ஆயோக் கூட்டத்தில் தில்லி துணைநிலை ஆளுநர் கலந்து கொள்ளவில்லை' என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com