துணைநிலை ஆளுநர் மாளிகையில் போராட்டம் நடத்த கேஜரிவாலுக்கு அனுமதி அளித்தது யார்?: உயர் நீதிமன்றம் கேள்வி

தில்லி துணைநிலை ஆளுநர் மாளிகைக்குள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு அனுமதி அளித்தது யார்? என்று தில்லி உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை
துணைநிலை ஆளுநர் மாளிகையில் போராட்டம் நடத்த கேஜரிவாலுக்கு அனுமதி அளித்தது யார்?: உயர் நீதிமன்றம் கேள்வி

தில்லி துணைநிலை ஆளுநர் மாளிகைக்குள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு அனுமதி அளித்தது யார்? என்று தில்லி உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை கேள்வி எழுப்பியது. எனினும், இதுதொடர்பாக எவ்வித உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை.
தில்லி துணைநிலை ஆளுநர் மாளிகையின் வரவேற்பு அறையில் முதல்வர் கேஜரிவால் மேற்கொண்டு வரும் போராட்டத்துக்கு எதிராக ஹரி நாத் ராம் என்பவரும், தில்லியில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படும் புகார் தொடர்பாக வழக்குரைஞர் உமேஷ் குப்தா என்பவரும் தனித் தனியாக உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.சாவ்லா, நவீன் சாவ்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தில்லி அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் சுதிர் நந்திரஜோக் 'இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு உள்பட்டே கேஜரிவால், தனது அமைச்சரவை சகாக்களுடன் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அமைச்சர்கள் நடத்தும் கூட்டங்களில் தில்லி அரசு அதிகாரிகளை பங்கேற்குமாறு உத்தரவிட வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.
மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர், ' தில்லியில் அரசு அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாகக் கூறப்படுவது தவறான தகவலாகும். துணைநிலை ஆளுநர் மாளிகையில் இருந்து கேஜரிவால் உள்ளிட்டோர் உடனடியாக வெளியேற வேண்டும்' என்று வாதிட்டார்.
பின்னர், நீதிபதிகள் கூறியதாவது: ஒருவருடைய அலுவலகம் அல்லது இல்லத்துக்குள் தர்னா / வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடியாது. தில்லி துணை நிலை ஆளுநர் மாளிகைக்குள் போராட்டத்தில் ஈடுபட முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு அனுமதி அளித்தது யார்? இது வேலை நிறுத்தம் அல்லது தர்னா என்றால் அது அலுவலகத்துக்கு வெளியே நடத்தப்பட வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், மனுக்கள் மீதான விசாரணையை ஜூன் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதனிடையே, ஆளுநர் மாளிகையில் கேஜரிவால் மேற்கொண்டு வரும் உள்ளிருப்புப் போராட்டத்துக்கு எதிராக தில்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா, பாஜக எம்எல்ஏ மஜீந்தர் சிங் சிர்சா, எம்பி பர்வேஷ், ஆம் ஆத்மி அதிருப்தி எம்எல்ஏ கபில் மிஸ்ரா ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தனியாக வழக்குத் தொடுத்துள்ளனர்.
இரு அமைச்சர்கள் மருத்துவமனையில் அனுமதி
தில்லி துணைநிலை ஆளுநர் மாளிகையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்த துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதல்வர் அரவிந்த் கேஜரிவால், அமைச்சர் கோபால்ராய் ஆகியோர் மேற்கொண்டுள்ள உள்ளிருப்புப் போராட்டம் எட்டாவது நாளாக திங்கள்கிழமையும் தொடர்ந்தது.
தில்லி அரசில் பணியாற்றும் உயரதிகாரிகள் கடந்த 4 மாதங்களாகப் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தியும், கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, அமைச்சர்கள் சத்யேந்தர் ஜெயின், கோபால் ராய் ஆகியோர் கடந்த திங்கள்கிழமை மாலை முதல் துணைநிலை ஆளுநர் மாளிகையில் உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடங்கினர்.
இதில், அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் செவ்வாய்க்கிழமையும், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா புதன்கிழமையும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். இந்நிலையில், உடல் நலக் குறைவு காரணமாக அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஞாயிற்றுக்கிழமை இரவும், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா திங்கள்கிழமை மாலையிலும் லோக் நாயக் ஜெய்பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இருவருக்கும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், அவர்கள் உணவு அருந்த மறுத்துவிட்டதால் குளுக்கோஸ் செலுத்தப்பட்டதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com