டேராடூனில் இன்று நான்காவது சர்வதேச யோகா தினம்: மோடி தலைமையில் 60,000 பேர் பங்கேற்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சி

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 60,000 பேர் பங்கேற்கும் பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி டேராடூனில் வியாழக்கிழமை நடைபெற உள்ளது.
உத்தரக்கண்ட் மாநிலம், டேராடூனில் யோகப் பயிற்சி நடைபெறவுள்ள மைதானம்.
உத்தரக்கண்ட் மாநிலம், டேராடூனில் யோகப் பயிற்சி நடைபெறவுள்ள மைதானம்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 60,000 பேர் பங்கேற்கும் பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி டேராடூனில் வியாழக்கிழமை நடைபெற உள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு முதல், ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. உலக அளவில் அனைவருக்கும் யோகா சென்றடைய வேண்டும் என்ற உன்னத நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட முயற்சிகளின் காரணமாக கடந்த 2014-ஆண்டு இறுதியில் ஐக்கிய நாடுகள் சபையில் 175 நாடுகளின் உறுப்பினர்கள் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
அதனடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது . இதைத் தொடர்ந்து , முதல் முதலாக சர்வதேச யோகா தினம் 2015-ஆம் ஆண்டில் ஜூன் 21-ஆம் தேதி கொண்டாடப்பட்டது. தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 35,985 பேர் பங்கேற்றனர். 84 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இந்நிகழ்வுக்குப் பிறகு இந்தியா மட்டுமின்றி உலக அளவிலும் யோகா பிரபலமடைந்தது வருகிறது. அதைத் தொடர்ந்து, இந்தியாவில் இரண்டாவது சர்வதேச யோகா தினம் சண்டீகரில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 
மூன்றாவது யோகா சர்வதேச தினம் உத்தர பிரதேச மாநிலம், லக்னெளவில் நடைபெற்றது. அதில் பிரதமர் மோடி அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்பட 51,000 பேர் பங்கேற்றனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு தேவபூமி மற்றும் யோக பூமி என்று அழைக்கப்படும் உத்தரகண்ட் மாநிலத்தின் தலைநகர் டேராடூனில் பிரம்மாண்ட வகையில் வியாழக்கிழமை நடத்தப்பட உள்ளது. டேராடூனில் உள்ள வன ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சுமார் 60,000 பேர் யோகா பயிற்சி மேற்கொள்ள உள்ளதாக அந்த மாநிலத்தின் முதல்வர் திரி வேந்தர சிங் ராவத் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் புதன்கிழமை மாலை மேலும் கூறியதாவது:
டேராடூனில் நான்காவது சர்வதேச யோகா தின நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டுப் பணிகள் கடந்த 15 தினங்களுக்கு முன்பு தான் தொடங்கப்பட்டது. யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்வதற்கான பணிகளை துறை ஊழியர்களும் அதிகாரிகளும் ஆர்வத்துடன் செய்து வருகின்றனர். குறுகிய காலத்திற்குள் அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் ஆர்வத்துடன் உள்ளனர். இந்நிகழ்வில் 60 ஆயிரம் பேருக்கு மேல் பங்கேற்க உள்ளனர். 
மேலும், ஹரித்துவார், ரிஷிகேஷ் உள்ளிட்ட இடங்களில் உள்ள யோகா அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் இதில் பங்கேற்க உள்ளனர். 
இந்நிகழ்வின் போது, பிரதமர் நரேந்திர மோடி யோகா பயிற்சி செய்து உரை நிகழ்த்தி யோகா மேம்பாட்டிற்கு பாடுபட்டவர்களுக்கு விருது வழங்க உள்ளார் என்றார் முதல்வர் திரிவேந்தர சிங் ராவத்.
மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபாத நாயக் செய்தியாளர்களிடம் கூறுகையில், யோகா மிகவும் பிரபலமடைந்து வருகிறது. உள்நாடு மட்டுமின்றி உலகின் பெரும்பாலான நாடுகளில் இன்றைக்கு யோகாவை பிரபலமாக்கி இருக்கிறார் பிரதமர் மோடி. தற்போது டேராடூனில் நடைபெறும் நான்காவது சர்வதேச யோகா தினக் கொண்டாட்டத்துக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க பதிவு செய்து வருகின்றனர். இந்நிகழ்ச்சி நடத்துவதற்கு மத்திய ஆயுஷ் அமைச்சகம் சார்பில் உத்தரகண்ட் மாநில அரசுக்குத் தேவையான ஆதரவு அளிக்கப்பட்டுள்ளன. யோகா தின நிகழ்வுகள் நடத்தப்படும் இடங்கள், பங்கேற்கும் நபர்களின் எண்ணிக்கை ஆகிய விவரங்களை இஸ்ரோ நிறுவனத்தின் சாட்டலைட் மூலம் பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் உலக அளவில் எவ்வளவு பேர் யோகா தின நிகழ்வில் பங்கேற்று இருக்கிறார்கள் என்கிற விவரமும் தெரிய வரும் என்றார் அவர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com