பெட்ரோல்-டீசல் மீது 28% ஜிஎஸ்டியுடன் வாட் வரி?: மத்திய அரசு பரிசீலனை

பெட்ரோல் - டீசல் மீது 28 சதவீத ஜிஎஸ்டி வரியுடன் கூடுதலாக மாநில அரசுகள் மதிப்புக் கூட்டு வரி (வாட்) அல்லது விற்பனை வரி விதிக்கவும் அனுமதிக்கும் வகையில் வரித் திட்டத்தை உருவாக்குவது
பெட்ரோல்-டீசல் மீது 28% ஜிஎஸ்டியுடன் வாட் வரி?: மத்திய அரசு பரிசீலனை

பெட்ரோல் - டீசல் மீது 28 சதவீத ஜிஎஸ்டி வரியுடன் கூடுதலாக மாநில அரசுகள் மதிப்புக் கூட்டு வரி (வாட்) அல்லது விற்பனை வரி விதிக்கவும் அனுமதிக்கும் வகையில் வரித் திட்டத்தை உருவாக்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

நாட்டில் பெட்ரோல், டீசல் விலை கடந்த மாதம் முன்னெப்போதும் இல்லாத அளவில் புதிய உச்சத்தைத் தொட்டது. கடந்த 29-ஆம் தேதி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.81.43-ஆகவும், டீசலின் விலை ரூ.73.18-ஆகவும் உயர்ந்தது. அதன் பிறகு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைவு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு ஆகியவற்றின் காரணமாக சிறிய அளவில் விலை குறைந்துள்ளது.

இதனிடையே, பெட்ரோல் - டீசல் விலை உயர்வால் சாதாரண மக்கள் மீதான சுமை அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்றும், ஜிஎஸ்டி வரி விதிப்பின்கீழ் பெட்ரோல் - டீசலை கொண்டு வர வேண்டும் என்றும் பல்வேறு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

ஒரு லிட்டர் பெட்ரோல் மீது ரூ.19.48-ம், ஒரு லிட்டர் டீசல் மீது ரூ.15.33-ம் மத்திய அரசால் கலால் வரியாக விதிக்கப்படுகிறது. பல்வேறு மாநில அரசுகளும் இதைவிட சற்று குறைவாக வாட் வரியை பெட்ரோல், டீசல் மீது விதித்து வருகின்றன. தெற்காசிய நாடுகளில் எரிபொருள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவது இந்தியாவில் மட்டும்தான். அதன் மீது மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் அதிகபட்ச வரியே இதற்குக் காரணம். பெட்ரோல், டீசல் விலையில் ஏறக்குறைய பாதியளவு (45 - 50%) வரியாக உள்ளது. 

கடந்த 2014 முதல் 2016-ஆம் ஆண்டு வரை கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது கலால் வரியை மத்திய அரசு 9 முறை அதிகரித்தது. அதே நேரத்தில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், கடந்த ஆண்டு அக்டோபரில் லிட்டருக்கு 2 ரூபாய் மட்டுமே கலால் வரி குறைக்கப்பட்டது.

எனினும், கலால் வரியைக் குறைப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் விலை குறையும் என்றாலும், அதனால் மத்திய அரசுக்கு பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்படும்; கலால் வரியில் ஒரு ரூபாயைக் குறைத்தால் அரசுக்கு ரூ.13,000 கோடி அளவுக்கு வருவாய் குறையும்' என்று மத்திய அரசு கூறி வருகிறது.

இந்நிலையில், பெட்ரோல் - டீசல் மீது 28 சதவீத ஜிஎஸ்டியுடன் கூடுதலாக மாநில அரசுகள் வாட் அல்லது விற்பனை வரி விதிக்கவும் அனுமதிக்கும் வகையில் வரித் திட்டத்தை உருவாக்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய அரசு உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது: ஜிஎஸ்டி வரி விதிப்பின்கீழ் அதிகபட்ச வரி விகிதம் 28 சதவீதமாகும். தற்போது பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படும் வரி அதைவிட அதிகமாக உள்ளது. எனவே, 28 சதவீத ஜிஎஸ்டி வரி மட்டுமே விதித்தால் மத்திய, மாநில அரசுகளுக்கு பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்படும். அதுமட்டுமன்றி பெட்ரோல் - டீசலுக்கு ஜிஎஸ்டி வரி மட்டுமே விதிக்கும் நடைமுறை வேறெந்த நாடுகளிலும் இல்லை. 

எனவே, 28 சதவீத ஜிஎஸ்டி வரியுடன் கூடுதலாக மாநில அரசுகள் விற்பனை வரி அல்லது வாட் வரி விதிக்க அனுமதிக்கும் வகையில் வரித் திட்டத்தை உருவாக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையை அமல்படுத்தினாலும் மத்திய அரசுக்கு ரூ.20,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்றார் அந்த அதிகாரி. எனினும், மத்திய அரசு பரிசீலித்து வரும் வரித் திட்டம், தற்போதுள்ள வரி விதிப்புக்கு சமமாகவே இருக்கும் என்று துறைசார் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com